பக்கம்:கபாடபுரம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கபாடபுரம்


பரபரப்பும் பயமும் வீண் பிரமையே என்பதனை இப்போது அவர்கள் இருவரும் உணர்ந்தனர். உள்ளே இறங்கி, அந்தச் சுரங்கவழி போய் முடிகிற மற்றோர் இடத்தையும் கண்டுபிடிக்கப் போதுமான காலமும் வாய்ப்பும் இருக்குமென்று தோன்றியது. எஞ்சியுள்ள காலத்தை வீணாக்காமல் செயல்படலாமென்று இளையபாண்டியனும் முடிநாகனும் எண்ணினர்.

"எதற்கும் இந்தப் புதரருகே இந்தப் பகுதி எங்கிருக்கிறதென்று அடையாளம் தெரிகிறார்போல எதிர்புறமுள்ள மதிற்கவரில் ஒரு குறியீடு செய்துவைப்பது நல்லது. முரசமேடை வழியிலிருந்து இங்கே புறப்பட்டு வராமல் - இங்கிருந்து முரசமேடைப் பகுதிக்குப் போகவேண்டிய அவசியம் என்றாவது வருமானால் இங்கு இந்த மதிற்கவரில் உள்ள குறியீட்டைப் பார்த்து வழி தொடங்குமிடத்தை அறியமுடியும்" என்று முடிநாகன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுச் செயல்புரிந்தான் இளையபாண்டியன்.

அந்தப் புதருக்கு நேர் எதிரே மதிற்கூவரில் வழி இங்கே விளங்கும் என்பதை மிகவும் குறிப்பாக உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற முறையில் விளக்குப்போல் உருத் தோன்றக் கோடுகள் கீறிவைத்தான். பெரும் பரப்பாக விரிந்துகிடந்த தேர்க்கோட்டப் பகுதியில் அது எந்த இடம் என்பதையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துத் தெளிவாக நினைவு வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

முரசமேடை வழியின் மற்றோர் நுனியைக் காண்பதற்காக அவர்கள் மீண்டும் வந்த வழியே உள்ளே இறங்கிய போது,

"எனக்கொரு சந்தேகம் வருகிறது முடிநாகா இருளோ இன்னும் புலரவில்லை. வழி முடிகிற இந்த இடத்திலோசெடியும் கொடியும், புதருமாயிருக்கிறது. அப்படியிருக்கையில் நாம் உள்ளே கண்ட ஒளிக்கீற்று எங்கிருந்து வந்திருக்க முடியும்? அவ்வளவு தெளிவான ஒளி இந்த இருளில் எங்கிருந்தும், எப்படியும் வருவதற்குச் சாத்தியமில்லையே?" - என்று ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/96&oldid=490020" இருந்து மீள்விக்கப்பட்டது