பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கப்பலோட்டிய தமிழன்

பட்டினத்தடிகள் பாடியதற்கேற்ப ஆவேசத் தீ போல, அந்நிய ஆடைகளுக்கு இந்தியர் இட்ட தீ ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்திற்கே வைத்த தீயாக மாறி கொழுந்து விட்டெரிந்து கொண்டே இருந்தது.

சிதம்பரனார் இதை சரியான நேரமாகக் கண்டார். வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தார். தேச விடுதலைப் போரில் குதித்தார். அதன் அறிகுறியாக தன்னிடம் இருந்த அன்னிய துணிமணிகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி எரித்தார். இனி பிற நாட்டான் பொருள் எதையும் வாங்குவதில்லை என்று சபதமெடுத்தார்.

அந்நியத் துணி எவன் அணிந்திருந்தாலும், அவனை விரோதியாகவே பாவிக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது அந்நியனான ஆங்கிலேயனை எதிர்த்து இந்திய மக்கள் வங்கத்தில் போர்க்களம் கண்டு போராடுவதைக் கேட்டு மகிழ்ந்தார். அதே நேரத்தில் ஒவ்வொரு தமிழ் மகனையும் இந்தப் போராட்டக் களத்தில் குதிக்க வைக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதை ஒரு கடமையாகவும் கருதினார்.

வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதை சிதம்பரனார் உணர்ந்த காரணத்தால், அதே செல்வத்தைக் கொள்ளையடிக்கும் வெள்ளை வணிகர் கூட்டத்தினர் மீது தனது முதல் தாக்குதலைத் துவங்கினார்.

தூத்துக்குடி நகருக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே ஆங்கிலேயர்களது பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் என்ற வணிக நிறுவனத்தின் கப்பல்களே வியாபாரம் செய்து வந்தன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒர் ஆங்கிலேயர். இவர் இந்தியா சுதந்திரமடையக் கூடாது; வெள்ளையர்களின்