பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கப்பலோட்டிய தமிழன்


வ.உ.சி. பம்பாய் சென்றபோது, அவரது ஒரே மகன் உலகநாதன் நோய்வாய்பட்டு இருந்தான். மனைவி மினாட்சி கர்ப்பிணியாக இருந்தார். சிதம்பரனார் நண்பர்கள் அவரை இப்போது போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் அவர் எனது மகனையும் - மனைவியையும் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறிவிட்டு பம்பாய் சென்றார். குடும்ப நலத்தை விட தேச சேவைதான் பெரியது என்ற எண்ணத்தோடு அவர் பம்பாய் போனார்.

எடுத்த காரியத்தில் மிகக் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடு பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் அவர் ஒரு கப்பலுடன் துத்துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்தார். கப்பலின் பெயர் ‘காலிபா’ என்பதாகும். கப்பலுடன் திரும்பி வந்த சிதம்பரனாரின் சாதனைத் திறனைக் கண்டு மக்களும், தமிழ் வணிகர்களும் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

அதே நேரத்தில் வேத மூர்த்தி என்ற அவரது நண்பர் பிரான்சு நாட்டுக்குச் சென்று ‘லாவோ’ என்றொரு கப்பலை வாங்கி வந்தார். அத்துடன் இரண்டு இயந்திரப் படகுகளும் சேர்த்து வாங்கப்பட்டன.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய கப்பல்களை வாங்கிய சிதம்பரனாரின் செயல் திறன் சாதனையைக் கண்டு இந்திய, தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பாராட்டின. மக்கள் கவி பாரதியார் தான் நடத்தி வந்த ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகையில், வெகு காலமாகப் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி பெறுவாளோ - அது போல, அளவற்ற ஆனந்தத்தை