பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கப்பலோட்டிய தமிழன்

அப்போதும் கூட மக்கள் ஆதரவு வெள்ளையர் கப்பல் வாணிகத்துக்கு இல்லை. இதற்கு மேலும், என்ன செய்யலாம் என்று யோசித்த பிரிட்டிஷ் நிர்வாகம், சிதம்பரனாரைச் சந்தித்து, ‘சுதேசிக் கப்பல் நிர்வாகத்தை விட்டு விட்டு வாருங்கள். லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்’ என்றும் கேட்டார்கள்.

‘இலஞ்சமா? எனக்கா? நான் துவங்கிய சுதேசிக் கம்பெனிக்கு என்னையே துரோகம் செய்யச் சொல்கிறீர்களா? முடியாது. ஊர் மக்களும், மனச் சான்றுடையாரும் இழித்துப் பழித்துப் பேசும் லஞ்ச ஈனச் செயலுக்கு நான் உடன்பட மாட்டேன்! போ, வெளியே’ என்று தூது வந்த ஆங்கிலேயத் தரகனைச் சிதம்பரனார் துரத்தியடித்தார். பொருளுக்காக தேச பக்தியை அடகு வைக்கும் மானமற்ற பணியைச் செய்ய தூது வந்த கதையைச் சிதம்பரனார் பொது மக்களிடம் அம்பலப்படுத்தினார்.

இதற்குப் பிறகு, கப்பல் வாணிகத்தோடும், கைத் தொழில், விவசாய வளர்ச்சி போன்றவற்றிலே கவனம் செலுத்தி, தொழில் துறையில் அனுபவமுள்ள பலரின் உதவியுடன் சென்னை விவசாய கைத் தொழிற்சங்கம் லிமிடெட் என்ற ஒரு சங்கத்தை சிதம்பரனார் தொடங்கி வைத்தார். இந்த சங்கத்துக்குரிய பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் சேர்ப்பது என்ற முடிவோடு அவர் பணியாற்றினார்.

ஏழைத் தொழிலாளர்களும், உழவர் பெருமக்களும் அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆனார்கள். இதற்கடுத்து, “தரும சங்க நெசவு சாலை”, “தேசிய பண்டக சாலை” என்ற இரு துணை நிறுவனங்களையும் சிதம்பரனார் துவங்கினார்.