பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கப்பலோட்டிய தமிழன்

வடநாட்டின் காங்கிரஸ் மகா சபையில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இணைந்து பணியாற்றுவதில், அவர்களுக்குள்ளே சுதந்திரம், நாட்டு விடுதலை ஒன்றே உயிர் மூச்சாக இருந்தது.

இந்த நேரத்தில் 1907 - ஆம் ஆண்டு சூரத் நகரில் தேசிய மகாசபை கூட்டம் கூடியது. அந்த மகா சபைக் கூட்டத்திற்கு சிதம்பரனாரும் சென்று கலந்து கொண்டார். காங்கிரஸ் மகாசபை பிரதிநிதிகள் தங்கியிருந்த விடுதியில், லாலா லஜபதிராய், அரவிந்தர், லோகமான்ய பாலகங்காரதர திலகர், விபின் சந்திரர், கோபால கிருஷ்ண கோகலே, பண்டித மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், ராஷ் பிகாரி கோஷ் போன்ற வேறு பலரும் தங்கியிருந்தார்கள்.

அப்போது அரவிந்தர் மற்றவர்களைப் பார்த்து, ‘என் பிள்ளையவர்கள் எங்கே?’ என்று குரல் கொடுத்தார்! அங்கே கூடியிருந்த வடநாட்டுத் தலைவர்கள் எல்லாம் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள். உடனே அரவிந்தர் எழுந்து “அவர் தாம் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தேசபக்தர் தூத்துக்குடி வக்கீல் சிதம்பரம் பிள்ளை” என்றார்.

அதே நேரத்தில் சிதம்பரம் பிள்ளை எதிர்பாராமல் திடீரென மகா சபைக்குள் நுழைந்த போது, அரவிந்தர் விர்ரென்று எழுந்து போய் சிதம்பரம் பிள்ளையை அன்போடு மார்போடு மார்பாக அனைத்துக் கொண்டு. ‘இவர் தான் சிதம்பரம் பிள்ளை’ என்று கூடியிருந்த எல்லோருக்கும் அடையாளம் காட்டினார்.

சூரத் காங்கிரஸ் மகா சபையில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.