பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

37

பேச்சு. குடும்ப வாழ்வை வெறுத்த ஒரு துறவி. ஆழ்ந்த தமிழ் இலக்கிய நூலறிவும், ஆங்கில ஞானமும் பெற்ற நாவலன். நாட்டில் வளர்ந்துவரும் பாரதத் தாயின் விடுதலை உணர்ச்சி இயக்கம் அவரை ஒரு சுதந்திர வெறியராக்கிவிட்டது எனலாம்.

நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர். மதுரை மாவட்டத்தில் அவர் காலடி படாத கிராமங்கள், நகரங்கள் இல்லை எனலாம். ஒவ்வொரு ஊருக்கும் சென்று தேசிய பிரச்சாரம் என்ற நெருப்பை மூட்டி விட்டு வருவார். அதுதான் அவரது விடுதலைப் பணி. சிலரது நெஞ்சங்களிலே அத்தீ சூடேற்றிக் கொண்டே இருக்கும்.

1907-ஆம் ஆண்டு இவர் திருநெல்வேலிக்குச் சென்றார். தேசாபிமானிகள் சங்கத்தார் அவரை வரவேற்றார்கள். சிதம்பரம் பிள்ளை சிவாவைச் சந்தித்தார். ஒருவருக்கு ஒருவர் கனன்று கொண்டும் விசிறிக் கொண்டும் ஆங்கில எதிர்ப்பு என்ற கனலைக் கக்கினார்கள்.

இவ்விருவரது சொற்பொழிவைக் கேட்க மாவட்டம் முழுவதுமுள்ள தேசியவாதிகள் திரண்டார்கள். சிவா, தூத்துக்குடி சென்று அங்கும் பிரசாரம் செய்தார். சுதேசிக் கப்பல் நிறுவனப் பணிகளை முடித்துக் கொண்டு நாள்தோறும், சிவா எங்கு பேசினாலும் சரி, அங்கே சென்று அவர் சொற்பொழிவுகளைக் கேட்டு உணர்ச்சி பெறுவார் சிதம்பரனார். சிவாவின் துடிதுடிப்பான பேச்சும் கணிர் கணிரென்ற குரல் வளமும், தீ போன்று சிதறி விழும் சொற்பிரயோகங்களும் சிதம்பரனாருக்கு மிகவும் பிடிக்கும்! எனவே, சிவாவின் பேச்சைக் கேட்க சிதம்பரனார் ஒருநாளும் தவறமாட்டார். அதுபோலவே இருவரும் பிரியா நண்பர்களாகவும் மாறினர்.