பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கப்பலோட்டிய தமிழன்

சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து பொதுக் கூட்டங்களில் பேசவேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்துவார்கள். அதனால் இருவரும் இணைந்து பேசும் கூட்டம் என்றாலே ஆயிரக்கணக்கானோர் அக்காலத்திலே கூடிக் கேட்பார்கள். காரணம், சிவா பேச்சு எரி நெருப்பாகக் கனல் வீசும். சிதம்பரம் பேச்சோ அந்த நெருப்பை ஊதிவிடும் சூறைக் காற்றாகச் சுழன்று வரும். அதனாலே தேசபக்தர்கள் அவர்களது கூட்டங்களுக்குப் பெருந்திரளாக வந்து கூடுவார்கள். தூத்துக்குடி நகரிலே தற்போது ஹார்வி பஞ்சாலை என்று அழைக்கப்படும் பஞ்சாலைக்கு அப்போது கோரல்மில் என்று பெயர். அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு கூலியை உயர்த்தவேண்டும் என்று வெள்ளை முதலாளிகளிடம் வேண்டினார்கள். அதற்கு அந்த முதலாளிகள் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார்கள். இதைக் கண்டு மனங்கொதித்த ஊழியர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப்பாட்டுடன் வேலைநிறுத்தம் செய்தார்கள். அதனால், அவர்களது குடும்பங்கள் பல பட்டினியாகக் கிடந்தன.

சிதம்பரனார் வெள்ளையர்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, சில வழக்குரைஞர்களின் உதவியால் பணம் திரட்டி, பட்டினி கிடக்கும் தொழிலாளர் குடும்பத்துக்குப் பேருதவி புரிந்தார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டாயிரம் தொழிலாளர்களில் ஓராயிரம் பேருக்கு துத்துக்குடி மக்களிடம் வேண்டி கேட்டு வேலைகளைப் பெற்றுத் தந்தார்.

வேலை நிறுத்தம் நடந்த எல்லா நாட்களிலும், தூத்துக்குடி நகரில் வெள்ளையர்களது தொழிலாளர்கள் துரோகத்தைக் கண்டித்துப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.