பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கப்பலோட்டிய தமிழன்

வெள்ளையர் ஆட்சி ஒழிக. என்ற முழக்கங்களை வீராவேசமாக எழுப்பிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள்.

நெல்லை நகராட்சி மண்ணெண்ணெய் கிடங்குக்கு தீ வைத்தார்கள். அந்த கிடங்குகள் பெருநெருப்பிலே எரிந்து ஜூவாலைகளை எழுப்பின. ஆங்கிலேயர் அலுவலகங்கள் எல்லாம் தீக்கிரை ஆயின.

பொதுமக்கள் நெல்லை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேசைகள் நாற்காலிகள், மற்ற பொருட்களை எல்லாம் தவிடு பொடியாக்கினார்கள். அவைகட்குத் தீயிட்டார்கள்.

சர்ச் மிஷன் என்ற கல்லூரியிலே புகுந்து அங்கே இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து வீதியிலே தூக்கி எறிந்தார்கள். அந்தக் கல்லூரியும் தீக்கு இரையானது. போலீஸ் ஸ்டேஷன் உள்ளே புகுந்த பொது மக்கள் அங்கிருந்த துப்பாக்கிகள், லட்டிகள், வேறு சாமான்களை எல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். போலீஸ் ஸ்டேஷனும் தீயிலே எரிந்தது.

பொதுமக்களின் இந்தக் கோபாவேஷ அழிப்புச் சக்திகளைக் கேள்விப்பட்டக் கலெக்டர் விஞ்சும், போலீஸ் சூப்பிரண்டுகளும், போலீசாரும் அங்கங்கே ஓடிக் கலகத்தை அடக்க முயன்றார்கள். போலீசார் பொதுமக்களை விரட்டுவதும், பொதுமக்கள் போலீசாரைத் துரத்தி துரத்தி அடிப்பதும் பெரும் கலவர பூமியாக நெல்லை நகர் காணப்படுவதும் கண்டு ஊர் மக்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு வீதிகள் தோறும் ஆரவாரமிட்டபடியே இருந்தார்கள்.