பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
கப்பலோட்டிய தமிழன்
 

தேசியத் தொண்டர்கள் மனமுருகிப் பாடி வாழ்த்துமாறு பாடிப் பெருமைப்படுத்தியுள்ளார்.

சிதம்பரனாருக்கு வெள்ளை நீதிபதியால் வழங்கப்பட்ட கொடுமையான சிறைத் தண்டனையைக் கேட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியப் பத்திரிகைகள் நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பைக் கடுமையாக விமரிசனம் செய்து தாக்குதல்களைத் தொடுத்தன. தலையங்கங்கள் எழுதிக் கண்டனம் செய்தன.

‘வங்காளி’ என்ற ஒரு ஏடு, ‘நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பு இந்த நாட்டில் அமுலுக்கு வரும் நாள் இந்திய மக்களது உரிமைகளுக்குரிய கொடுமையான துன்பநாள்’ என்று எழுதித் தனது கவலையை வெளியிட்டது.

‘அமிர்தபஜார்’ என்ற வேறொரு வடநாட்டுப் பத்திரிகை, ‘பின்ஹேயின் அநீதித் தீர்ப்பு, சிதம்பரம்பிள்ளை ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் நேர்ந்ததில்லை. அந்த வீரப் பெருமகனுக்குத் தலை வணங்குகிறோம்’ என்று வருந்தி எழுதியது.

‘சுதேசமித்திரன்’ என்ற தமிழ்நாட்டு நாளேடு, ‘இக்கொடுந்தண்டனையால் பிரிட்டிஷ் நீதித்துறைக்கே அவமானம் என்று எழுதிக் கண்டித்தது. தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளைக்கு நேர்ந்துள்ள துன்பத்தைக் கேட்டு இந்தியாவே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. நினைக்கும்போதே உடல் சிலிர்க்கின்றது. மயிர் கூச்செரிகிறது. எழுதக் கை கூசுகின்றது. இந்ததுக்கத்தைத் தென்னிந்திய மக்கள் எப்படிச்சகிப்பார்கள்? இவ்வளவு பெரிய கொடுந்தண்டனை விதிக்கப்படும் என்று எவருமே கனவிலும் எண்ணவில்லை’ என்று அதே ‘சுதேசமித்திரன்’ ஏடு எழுதியது.