பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கப்பலோட்டிய தமிழன்

ஏன், அவ்வாறு வெள்ளையர் ‘இந்தியா’ பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றால், நீதிபதி பின்ஹேயை அந்த இதழ் கண்டனம் செய்து எழுதியதாம். அத்துடனில்லாமல், சிதம்பரம் பிள்ளை எதற்காகத் தண்டனை பெற்றாரோ அதனையே பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று எழுதியதாம்.

பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகையினை வெளியிடுபவராக, சீறிநிவாசய்யங்கார் என்பவர் இருந்தார். ஐயங்காரையும் தண்டித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதற்குப் பிறகு தான் ‘இந்தியா’ வார ஏட்டின் அலுவலகம் பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி என்ற நகருக்கு மாற்றப்பட்டது.

இந்திய மந்திரியாக அப்போது இருந்த மார்லி என்ற வெள்ளைப் பெருமகனுக்கு, சிதம்பரம் பிள்ளைக்கு 40 ஆண்டுகள் தந்துள்ள தீவாந்தரச் சிறை தண்டனையின் கொடுமைத் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் ராஜப்பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு மிண்டோவிற்கு, “சிதம்பரனாருக்கும், சிவாவுக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாகக் கண்டித்து எழுதினார். அந்தக் கொடுமையான தண்டனைகள் நிலைக்காது” என்றும் எழுதினார். இவர் இப்படி எழுதியதை முன்னிட்டு மிண்டோ துரை நீதிபதி பின்ஹேயை வேறோர் மாகாணத்திற்கு மாற்றிவிட்டார்.

தனக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு சிதம்பரம் மேல் முறையீடு செய்தார்.