பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

67

பிடிவாதமான மன உரத்தைக் கண்ட அதிகாரி மேற்கொண்டு அவரை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்.

இராமன் என்ற ஒரு காண்விக்ட் வார்டர், சிதம்பரம் பிள்ளையின் பெருமையை உணர்ந்து அவரைக் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுவதை ஒரு ஜெயிலர் பார்த்து விட்டார். “இனிமேல் சிதம்பரத்தை வணங்கினால் உன்னைச் செருப்பால் அடிப்பேன்” என்று வணங்கிய ராமனைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தான் அந்த ஜெயிலர்

கோயம்புத்தூர் சிறையிலே, திருநெல்வேலி கலவரத்தில் தண்டிக்கப்பட்ட சிலர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிதம்பரனாருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அந்தக் கைதிகளும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்கள். அதே நேரத்தில் ராமன் சிதம்பரத்தை வணங்கியபோது ஜெயிலர் பேசிய கடுமையான வார்த்தைகளையும், சிதம்பரத்தின் பெருமை, புகழ், மரியாதை, மதிப்பு தெரியாத அந்த அதிகாரியின் செயலைக் கண்டும் அவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள்

ஒருநாள் அதிருப்தியாளர்கள் எல்லாம் வேறொரு வார்டில் கூடி, நமது தலைவரை அவமதித்த அந்த ஜெயிலரைக் கொன்று விடுவது என்று திட்டமிட்டார்கள் திடீரென்று ஒரு நாள் அந்த ஜெயிலரின் அலுவலகம் தாக்கப்பட்டது. அன்று ஞாயிற்று கிழமை. விடுமுறை நாளாதலால் காவலாளிகளில் பலர் வரமாட்டார்கள் விடுமுறையில் இருந்தார்கள் இதனையெல்லாம் தாண்டி அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், இரண்டு மணி நேரமாக ஜெயிலிலேயே பெரிய கலவரத்தையும், அடிதடிசண்டைகளையும் உருவாக்கி, சிறையையே கலவரக் கூடமாக்கி விட்டார்கள்.