பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

71

கொண்டனர் ஒவ்வொருவரும் சங்க உறுப்பினராகும்போது, ரத்தக் கையெழுத்திட்டுள்ளனர் அவர்களிடம் பரங்கி ஒழிப்பு என்ற அச்சகம் இருந்ததால், அடிக்கடி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுத் தங்களது நடவடிக்கையை மக்களுக்குத் தெரிவிப்பது வழக்கம் ஆங்கிலேய அரசு அந்த தேசபக்த இளைஞர்களைத் தண்டிக்கத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கடும் தண்டனை பெற்றார்கள்.

புரட்சிக்காரர்கள் பலர் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்குள் தஞ்சமடைந்தார்கள். புதுவையிலிருந்த புரட்சிக்காரர்கள், லண்டன், பாரிஸ் போன்ற இடங்களிலே இருந்த புரட்சித் தீவிரவாதிகளோடு சம்பந்தமும், நட்பும் கொண்டிருந்தனர்.

விநாயக தாமோதர சவர்க்கார் புரட்சிக்காரர்களின் தலைவராக இருந்தார். லண்டனில் இந்தியா மாளிகை புரட்சிக்காரர்களின் பாசறையாக இருந்தது. இந்த புரட்சிவாதிகளுடன் தான் தமிழ்நாட்டு புரட்சிவாதிகளும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

புரட்சியாளர்கள் புதுவையிலிருந்து பாரிஸ் வழியாக இந்தியா மாளிகைக்குச் சென்றார்கள். 1910-ஆம் ஆண்டிற்குள் புரட்சிக்கு திட்டம் உருவானது. வ.வெ.சு.ஐயர், சியாம்ஜி, கிருஷ்ண வர்மா ஆகியோர் பாரிஸ் வழியாகப் புதுச்சேரிக்கு வந்தார்கள்.

இதுபோன்று புரட்சிக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி கலெக்டராக இருந்த ஆஷ்துரை பதவி உயர்வால் கலெக்டரானார்.