பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கப்பலோட்டிய தமிழன்

கோயம்புத்துர், கண்ணனூர் சிறைகளில் கடுமையாக அனுபவித்து விட்டு, 1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையடைந்தார்.

சிறையிலே இருந்து விடுதலையான சிதம்பரம் பிள்ளையை வரவேற்றிட எந்த ஒரு தமிழனும் சிறை வாயிலுக்கு வரவில்லை. தமிழ்நாடு அவரது தியாகத்தை நன்றி கெட்டத்தனமாக அப்போது மறந்துவிட்டது. சிறையிலே இருந்து வெளிவந்த சிதம்பரனாரை சிறை வாயிலே வரவேற்ற ஒரே நண்பர் சுப்பிரமணிய சிவா மட்டும்தான். ஆறு வருடங்கள் சிறையிலே பல கொடுமைகளைக் கடுமையாக அனுபவித்தவர் வ.உ.சி. அதுமட்டுமல்ல, வழக்குரைஞராகப் பணியாற்றி வானளாவும் பெரும் புகழைப் பொது மக்களிடம் பெற்று வளமாக வாழ்ந்த பெருமகன் சிதம்பரனார். தன்னந்தனி மனிதனாக அரும்பாடுபட்டு உழைத்துப் பல கஷ்டங்களை ஏற்று, வெள்ளையர்கள் தமிழர்களைக் கொள்ளையடித்த பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்துக் கப்பலோட்டிய முதல் தமிழ் மகன் சிதம்பரனார். வடநாட்டுப் பத்திரிக்கைகளும், தென்னாட்டுப் பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து சிதம்பரனார் பெற்ற 40 வருட தீவாந்தரத் தண்டனையை எதிர்த்து எழுதிடும் அளவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர் சிதம்பரனார். அப்படிப்பட்ட செயற்கரிய செயல்கள் செய்து சிறையில் செக்கிழுத்த செம்மலை சிறைவாயிலிலே வரவேற்றிட காங்கிரஸ் மகா சபை மக்களுள் ஒருவரும் வராததால், அரசியலும் பொதுவாழ்வும் அப்போது மகா பெரிய நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டன என்பது தான் சிதம்பரனார் வரலாறாகக் காட்சியளித்தது.