பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

77

ஆனால், ஒரே ஒரு தமிழ் மகன், அவரும் சிதம்பரனாருடன் பெற்ற கடுந்தண்டனையை முன்கூட்டியே அனுபவித்து விட்டு, விடுதலையாகி வெளியே வந்திருந்த காரணத்தினால், நட்பினருமை தெரிந்த நன்றியுணர்ச்சியின் துடிதுடிப்பால், சிறையிலே அனுபவித்த கொடுமைகளின் காரணமாக குஷ்ட நோய் ஏற்பட்டு, அந்த நோய் உடலெல்லாம் பரவி, கால் கை விரல்கள் எல்லாம் மடிந்து வீங்கி வழியும் புண்களின் சீழ் ரத்தக் கோரமையோடு ஊன்று கோல் ஒன்றை ஊன்றிக் கொண்டு சிறைவாயில் முன்னே சிதம்பரனாரை வரவேற்றிட வந்திருந்தார் பாவம்!

அந்தக் குஷ்ட நோய் பெருமகனைக் கண்ட தியாக மூர்த்தி சிதம்பரம் பிள்ளை, கண்ணீர் விட்டுக் கதறி, குஷ்டநோயாளர் என்றும் பாராமல் அவரைக் கட்டித் தழுவி “அப்பா சுப்பிரமணிய சிவா, நீயாவது வந்தாயே!” என்று ஆரத் தழுவிக் கொண்டே கண்ணீர் சிந்தினார்.

சிதம்பரனார் வாழ்க்கையிலே அவர் அடைந்த துன்பங்களைக் கண்டு மனமுருகி வருந்தி வேதனைப்பட்டவர்கள் தமிழ் நாட்டிலே இரண்டே இரண்டு தியாக உள்ளங்கள்தான். ஒருவர் சுப்பிரமணிய சிவா. மற்றவர். கவியரசர் பாரதிப் பெருமகன் ஆவார். சிறை மீண்ட சிதம்பரனார் சென்னை மாநகரிலேயே சில ஆண்டுகளைக் கழித்தார்.

ராஜத்துரோகம் என்ற பெயரில் சிதம்பரனார் தண்டனை பெற்றவர் என்பதால், அவரது வழக்குரைஞர் சின்னமான ‘வக்கீல் சன்னத்து’ உரிமையை வெள்ளையராட்சி பறிமுதல் செய்துவிட்டது. அதனால் என்ன செய்வது என்று அறியாது திகைத்தார். தொழிலும் அவரால் நடத்த முடியவில்லை.