பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கப்பலோட்டிய தமிழன்

வருமானத்துக்கும் வேறு வழியில்லை. மக்கள் வறுமையிலே வாடக் கூடாது என்பதற்காகப் போர்க்கொடி தூக்கி வெள்ளையராட்சியோடு போராடிய அஞ்சா நெஞ்சர் சிதம்பரனார் தனது வறுமையைக் கண்டு நொந்தே போனார்:

துத்துக்குடி கோரல் மில்லின் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பட்டினியும் பசியுமாக அவர்கள் குடும்பங்கள் வாடியபோது, அந்தக் குடும்பங்களுக்காக நிதி திரட்டிக் கொடுத்து உணவளித்தவர்; வேலைகளைத் தேடித் தந்து அவர்களுக்கு வாழ்வளித்த சிதம்பரம் பிள்ளையின் அன்றைய கதி வறுமை; வாட்டம்; சோர்வு தளர்ச்சி; திகைப்பு.

சிதம்பரம் பிள்ளை இயற்கையாகவே இரக்க உள்ளம் கொண்டவர். பிறர் படும் வாழ்க்கைத் துன்பங்கள் அவர் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாகத் தைக்கும் போதெல்லாம் இல்லையென்று சொல்லாமல் இருப்பதைக் கொடுத்து உதவும் ஈரமுள்ளவர். எடுத்துக்காட்டாக...

ஒரு சமயம் ஒருவர் தனது பெண்ணுக்குரிய திருமண நாளைக் குறித்துவிட்டு சிதம்பரனாரிடம் வந்து, ‘எனது பெண் திருமணத்துக்கு நாள் வைத்து விட்டேன். கையிலே பணமில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கல்யாணத்தைச் செய்து விடுவேன்’ என்று மனமிளகிக் கேட்டபோது அவர் கேட்ட ரூபாய் ஆயிரத்தையும் உடனே வழங்கிய நெஞ்சர் அவர். அத்தகைய ஒரு பெருமகன் இன்று நாட்டுக்காக, சுதந்திரத்துக்காக, வெள்ளையரை எதிர்த்ததால் கைப் பொருளை இழந்தார். வருவாய் வரும் வக்கீல் சன்னத்தையும் இழந்து வருவாய்க்கு வழியற்ற வறுமையாளரானார்.