பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கப்பலோட்டிய தமிழன்

மனிதனுடைய நித்ய அனுஷ்டானத்தில் ஒவ்வொரு நிமிஷமும் முன்னணியில் நிற்கிற சரீர உணர்ச்சிகள் அவ்வளவும் ஹிம்சையையே பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும், மக்களுக்குள் அவை மறைந்தும் இருந்து கொண்டிருக்கிறது. ஆன்ம உணர்ச்சி ஒரு சிறிதும் தலைதூக்க முடியாதபடிதான் மனித சமூகத்தின் சமுதாய வாழ்க்கை நடந்தும், நடத்தப்பட்டும் வருகிறது.

எனினும், இந்த ஆன்ம உணர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைவாகவேனும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.

அற்புதப் பிறவியான மகாத்மா காந்தியவர்களின் அருந்தவங்களால் அவருக்குண்டான அதிசயிக்கத்தக்க ஆன்ம சக்தியின் வேகத்தால் எல்லா மனிதரிடத்திலும் இருந்து கொண்டே இருக்கிற ஆன்ம உணர்ச்சியானது அந்த கல்கத்தா காங்கிரசில் மேலோங்கி நிமிர்ந்து நின்றது.

அதனால், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் அஹிம்சைக் கொள்கைகளைக் கடைப்பிடித்தறியாத, கடைப்பிடிக்கவே முடியாத, முழுதும் முரட்டுப் பேர்வழிகளும் கூட, காந்தியடிகளின் அகிம்சை தீர்மானத்தை ஆவேசத்தோடு ஆதரித்தார்கள். அடிக்கடி அப்படி மேலோங்கி வருகின்ற ஆன்ம உணர்ச்சியின் உச்சாடன வேகம் குறைந்து போனதால்தான், இன்றைக்கு அந்த அகிம்சை மார்க்கத்துக்கு அடிப்படையாக இருந்த காங்கிரஸ்காரர்களிடத்திலும் கலவரங்களைக் காண்கிறோம்.

கலகங்களும், கலவரங்களும் எவ்வளவு ஏற்பட்டாலும், அந்த ஆன்ம உணர்ச்சி அஹிம்சையைத்தான் பிரதிபலிக்கும்.