பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 57.1 பிலம் சுரக்கும், பெறுதற்கு அறிய தம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்” கடல் வழியாகக் கப்பல்களிலும், தரை வழியாக வண்டிகளிலும் பெட்டி பெட்டியாக நிதிக் குவியல்கள் வந்து சேரும். நிலம் அதைச் சார்ந்த விளை நிலங்கள், காடுகள், மலைகள் ஆகியவை பலவகை வளங்களைச் சுரந்து கொண்டேயிருக்கும். ஆடு, மாடுகள், பால், தயிர், நெய், நெல், கரும்பு, வாழை, கமுகு, காய் கனிகள் தோட்டங்கள் தோப்புகள் மலர்வனங்கள், தேன், மரங்கள், கற்கள் முதலிய பலவகை உற்பத்திச் செல்வங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். சுரங்கங்கள் பலவகை மணிகளையும் உலோகங்களையும் சுரந்து கொண்டேயிருக்கும். குடிகள் எல்லாம் நல்ல ஒழுக்கங்களைப் பெருக்குவார்கள் என்று கம்பன் கூறுகிறார். கல்வி செல்வம், நிலவளம், வாணிபம், தொழில் வளம் அனைத்தும் சிறந்து அவைகளின் பலனாக குடிமக்களின் சீலமும் ஒழுக்கமும் சிறந்து நிற்பதையும் கம்பன் கவிதை குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒரு நாட்டில் வறுமையும், வேலையின்மையும், செயல் குறைவும், வளக்குறைவும், ஏற்ற தாழ்வுகளும், பற்றாக்குறைகளும் இயற்கை சூழல் பாதிப்புகளும், நீர்நிலைகள் வரண்டும், பஞ்சங்களும், பசி பட்டினியும் கல்லாமையும் படிப்பில்லாமையும் நிறைந்திருக்குமானால் அப்போது மக்களிடம் ஒழுக்கக் கேடுகளும் அதிகரித்து அந்த சமுதாயம் சீரழிவை நோக்கிச் செல்கிறது. அதற்கு மாறாக உழைப்பும் செல்வமும், கல்வியும், வளமும் வாணிபமும் நிறைந்த சமுதாயத்தில் ஒழுக்க நெறிகளும் மேலோங்கி நிற்கின்றன என்பதைக் குறிக்கும் வகையில் நெடிது நோக்குடன் கம்பன் இக்கருத்துக்களைக் குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த வளம் மிக்க ஒழுக்கம் நிறைந்த அறநெறியிலான சமுதாயத்தை உருவாக்குவதில் நாட்டின் அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் என்பது ஆட்சியும் நிர்வாகமும் மட்டுமல்ல. மக்களை செயலூக்கத்துடன் நாட்டுப் பற்றுடன் சமுதாய முன்னேற்றத்தில் ஈடு படச் செய்து வழிகாட்டி வழி நடத்திச் செல்வதுமாகும். - கம்பனுடைய இந்தப் பாடல்களில் மொழி வளமும், கருத்தாழமும் சிறந்த சமுதாய அரசியல் கருத்துக்களும் சொல்லழகும், உயர்ந்த குறிக்கோள்களும் வழி முறைகளும் இருப்பதைக் காணலாம்.