பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 573 அன்பு, அவர்கள் தங்கள் கணவன் பால் காட்டும் அன்பு, அவர்கள் தங்கள் குழந்தைகள் பால் காட்டும் அன்பு, உடன் பிறந்தோர் பால், புகுந்த வீட்டின் பால் காட்டும் அன்பு, நாட்டு மக்கள் பால், நல்லறங்கள் பால் காட்டும் அன்பு, அவ்வன்பு என்பது மகா சமுத்திரம். அது அனந்தமானது. எனவே கம்பன் அந்தப் பெண்களின் தாய்க் குலத்தின் அன்பை அவர்களுடைய கற்புக்கு முன்பாக முன் வைத்துள்ளார். அத்தகைய அன்பின் காரணமாகவே அத்தனை அறங்களும் நிலைத்து நிலை பெற்றிருக்கின்றன. அத்தகைய அன்பில் நிறைந்த மாதர்களின் கற்பில் நின்றன கால மாரி. அது நாட்டு வளம். அத்தகைய ஒழுக்கத்தினால் மழை தவறாது பெய்தது என்று கம்பர் குறிப்பிடுகிறார். கம்பனுடைய சமுதாய சிந்தனை படிப்படியாக அவருடைய கவிதைகளில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறது. கம்பனுடைய கோசலத்தில், “வண்மையில்லை ஒரு வறுமை யின்மையால் திண்மை இல்லை நேர் செருநர் இன்மையால் உண்மையில்லை பொய்யுரை இலாமையால் வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்!” அங்கு வாங்க வேண்டியவர்கள் இல்லை. அதனால் கொடுக்க வேண்டியவர்களும் இல்லை. அதனால் வாங்குபவர் இல்லாததால் கொடுப்பவர்களும் இல்லை என்று கம்பன் குறிப்பிடுகிறார். வறுமையில்லை அதனால் கொடையுமில்லை. நேருக்கு நேர் நின்று சண்டை போடும் பகைவர் இல்லை. அதனால் பலமுடையவர்கள் என்று யாருமில்லை. பொய் சொல்வதற்கே ஆள் இல்லாமையால் அங்கு உண்மை என்பதும் இல்லை. எல்லோரும் படித்து அறிவு நிரம்பியவர்களாக இருப்பதால் அறியாமையும் இல்லை என்று கம்பன் கூறும் இந்தக் கவிதைகளுக்கு இலக்கிய உலகில் ஈடு இணையே இல்லை. நாட்டுப் படலத்திலிருந்து நகரப் படலத்திற்குச் செல்லும் போது கம்பன் இன்னும் தனது மனிதாபிமான சமுதாய சம நோக்கின் உச்சத்திற்குச் செல்வதைக் காண்கிறோம்.