பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் கல்வியில் பெரியவன் கம்பன். தமிழில் இராமாயணக் கதையை பெரும் தமிழ்க் காவியமாகப் பாடியுள்ளார் அவர். கம்பன் தமிழ்ப் பற்று மிக்கவர். தமிழ் மொழியை உயர்த்திப் பாடியிருக்கிறார். கம்பனால் தமிழ் வளர்ந்திருக்கிறது. தமிழ் மொழிவளம் பெற்றிருக்கிறது. சொல்வளம், பொருள்வளம் பெற்றிருக்கிறது. கம்பன் தமிழின் சிறப்பை, தமிழ் நாட்டின் சிறப்பை, தமிழகத்தின் தனிச் செல்வமான பொன்னியின் சிறப்பைப் பாடியிருக்கிறார். கம்பன் தனது இராமாவாதாரக் காவியத்தில் கதை முழுவதிலும் பல இடங்களிலும் தமிழையும் தமிழின் பெருமையையும் பல பாடல்களிலும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். கம்பன் தனது இராமனை தென் சொல் (தமிழ்ச் சொல்) கடந்தவனாகப் பாடியுள்ளார் கம்பன் அயோத்தியைப் பாடும் போதும், திேலையைப் பற்றிக் கூறும் போதும், கிட்கிந்தையைக் காட்டும்போதும், சீதையைத் தேடும் போதும் இலங்கையை எரிக்கும் போதும், சஞ்சீவி மலையை (மருத்துவ மாமலையை) எடுக்கச் செல்லும் போதும், தமிழைக் காட்டி, தமிழைக் கூறி, தமிழ் மணத்தைப் பரப்புகிறார். கம்பனுடைய மகா காவியத்தில் தமிழை வளர்த்த அகத்திய மாமுனி மிக்க மரியாதையுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறார். கம்பன் கங்கையின் பெருக்கைக் கூறும் போதும் இராமன் வனத்தில் கடந்து செல்லும் மலைகளையும் காடுகளையும் பற்றிக் கூறும் போதும் தமிழையும் பொன்னியின் சிறப்பையும் சுட்டிக் காட்டிப் பாடுகிறார். அகத்திய முனிவரைப் பற்றிக் கூறும் போதும், சேது அணை கட்டுவதைக் கூறும் போதும் கம்பனது தமிழ் உள்ளம் களிப்போடு வெளிப்படுகிறது. கம்பன் காட்டும் அணிகள் எல்லாம் தமிழ் அணிகளாகத் தான் இருக்கின்றன. அவையடக்கம் கூறுவது தமிழ்க் கவிஞர்களின் மரபாகும். கம்பன் தனது அவையடக்கத்தில் முத்தமிழ் துறையின் முறை போகிய உத்தமர்களுக்கு ஒன்று கூறுகிறான்.