பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்து எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்வதற்காக எழுதியுள்ளேன் என்றுதான் கூற முடியும். நான் கம்பனுடைய மகாகாவியத்தைப் படிக்கும் போது, ஒரு முறை, மறு முறை, பல முறை படிக்கும் போது எனக்குக் கிடைத்த அறிவை, அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவலில் ஆசையில் இந்த நூலை எழுத வேண்டிய தேற்பட்டது.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில், அத்தலைப்புகளின் பொருளில் காவியத்தில் உள்ள கவிதைகளைத் தொகுத்துக் கருத்துக்களை உருவாக்கி வெளிப்படுத்த முயற்சிக்கப் பட்டிருக்கிறது.

ஒரு தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில கவிதைகள் வேறு தலைப்புகள் உள்ள பகுதிகளிலும் வருகின்றன. அவைகளைத் திரும்பக் கூறுதல், கூறியது கூறுதல் என்று எடுத்துக் கொள்ளாமல் அந்தந்தத் தலைப்பிற்குரிய பொருளைத் தேடி அக்கவிதைகள் மீண்டும் கையாளப் பட்டுள்ளன என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் கம்பனுடைய கதையும், கவிதைகளும் நாம் எத்தனை முறை படித்தாலும் அதில் நமக்கு அலுப்புத் தட்டுவதில்லை. இராமாயணக் கதையில் பல பாத்திரங்கள் மூலம் முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுவதாக வருகின்றன. அதை நாம் கதையைத் திரும்பக் கூறுவதாக எடுத்துக் கொள்வதில்லை. அது போல வெவ்வேறு தலைப்புகளிலும் இந்நூலின் கதைப் பகுதிகளும், கவிதைகள் சிலவும் பலவும் திரும்பவும் வந்திருந்தாலும் அவைகளை அந்தந்தத் தலைப்புற்குரிய முறையில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இந்நூலைப் படிக்கும் போது கதை நிகழ்ச்சிகளை படிப்பவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியுடனும் கஷ்டங்களுடனும் இன்ப துன்ப துயரங்களுடனும் நானும் பங்கு கொண்டு தமிழ் மக்களுக்கு நான் இந்த நூலை சமர்ப்பித்துக் கொள்கிறேன். இராமபிரானின் திருவருளாலும் அனுமனின் ஆசியாலும் இம்முயற்சி வெற்றி பெறட்டும்.

அ.சீனிவாசன்