பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சினிவாசன் 137 இங்கு இராமன் குகனைத் தனது இளையோனாக்கிக் கொண்டான். அன்றைய சமுதாயப் பழக்கத்தின் படி இராமனுடைய குலம் வேறு, குகனுடைய குலம் வேறு, ஆயினும் இராமன் குலம் பார்க்காமல் குகனிடம் வேறு பாடற்ற அன்பு பாராட்டி அவன் கொடுத்த மீன் உணவைச் சமமாக அமர்ந்து உண்டு, அவனைத் தனது சகோதரன் என்று இணைத்துக் கொள்கிறான். இந்தக் கருத்தைக் கம்பன் மீண்டும் குறிப்பிடுகிறார். மேலும் இராமன் கூறுவது, “துன்புளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்புளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் முன்புளம் ஒருநால் வேம், முடிவுளது என உன்னா அன்புள இனிநாம் ஒர் ஐவர்கள் உளர் ஆனோம்” காட்டிற்குச் செல்வதை இராமன் துன்பமாகக் கருதவில்லை. துன்பத்தையும் சுகத்தையும் ஒன்றாகவே இராமன் கருதினான் என்று கம்பன் கூறுவது தத்துவநிலை. இராமன் காட்டிற்குச் செல்லும் போது துறவுநிலையை ஏற்றிருக்கிறான். துறவிக்குத் துன்பமும் இன்பமும் ஒன்றுதான். இரண்டு நிலைகளுக்கும் இராமனுக்கு வேறுபாடில்லை. எனவே அந்தக் கருத்தை இராமன் குகனுக்குக் கூறுகிறான். அத்துடன் நாம் மீண்டும் சந்திப்போம் அதனால் பிரிவு என்பது இல்லை. இதைப் பிரிவாகக் கருதி வருந்த வேண்டாம். முன்பு நாங்கள் நால்வராக இருந்தோம், இப்போது நாம் எல்லை கடந்த அன்பால் பிணைக்கப்பட்டு ஐவராகி விட்டோம்” என்று இராமன் கூறுகிறார். அயோத்தியின் நால்வரோடு கங்கைக்கரையை ஆளும் குகனும் சேர்ந்து இப்போது ஐந்து சகோதரர்களாகி விட்டார்கள். அது மட்டுமல்ல அயோத்தி மக்களும் கங்கைக் கரையில் வாழும் மக்களும் உறவினர்களாகி விட்டார்கள். குறுநிலங்களும் சிறு நிலங்களும் இணைந்து பெரு நிலங்களாக விரிந்து மன்னராட்சி முறை உறுதிப் பட்டுப் பரவியதையும் இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இன்னும் இராமன் கூறுவது,