பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கதையாகப் பரவியிருக்கிறது. இராமாயணம் இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இராமாயணப் பெருங்கதை பாரத நாட்டின் பல பகுதிகளுக்கும், பிற நாடுகளுக்கும் பரவிய போது அந்தந்த நாடுகளின், பகுதிகளின் மொழிகளில் எழுதப் பட்ட போது அந்தந்த மண்ணின் தனிச் சிறப்புகளையும் இயல்புகளையும் மாற்றங்களையும் கொண்டு மணம் பரப்பியிருக்கிறது.

பலரும் பாடிய இராமாயணக் கதை அவரவர் பெயரில் வழங்கப் படுவதைக் காணலாம். இராமாயணக் கதையை முதன் முதலில் விரிவாகப் பெரிய இதிகாசமாக எழுதியவர் வால்மீகி என்னும் முனிவர் என்று பிரபலமாக வழங்கப்படுகிறது. வால்மீகி முனிவர் இக்கதையை வடமொழியான சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். சமஸ்கிருதம் மிகவும் சிறந்த இனிமையான கம்பீரமான மொழியாகும். மிகவும் விரிவு பட்ட உயிரோட்டமான செழுமை மிக்க மொழியாகும். அம்மொழி நமது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இலக்கிய மொழியாகவும் பண்டித மொழியாகவும் வளர்க்கப் பட்டிருக்கிறது. நமது நாட்டின் பண்டைய இலக்கியங்கள், இலக்கணங்கள், நூல்கள், இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்கள், மருந்தியல் மற்றும் வைத்திய நூல்கள், தத்துவ ஞான நூல்கள், விஞ்ஞான நூல்கள், கணிதம், இயற்பியல், வேதியல், உலோகவியல், வானவியல் கணிதம், சோதிடம், பொருளியல் (அர்த்த சாஸ்திரம்) காமசூத்திரம், அறிவியல் நூல்கள், நீரியல், பாசனவியல், தாவரவியல், விலங்கியல், கட்டிடவியல் முதலிய பல பிரிவுகளிலும் எண்ணற்ற மூல நூல்கள் உள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற வேதங்களும், அவ்வேதங்களுக்கான விளக்கங்களும், வியாகரணங்களும், சமஸ்கிருதத்தில் உள்ளன. ஆனால் வேதங்களின் மொழிக்கும் இதர நூல்களின் சமஸ்கிருத மொழிக்கும் வேறு பாடுகள் அதிகம் உள்ளதாகப் பண்டிதர்கள் கூறுகிறார்கள். வேதமொழி தனியான மொழியாக உள்ளது. இந்திய அறிவை அறிந்து கொள்ளவும் அபிவிருத்தி செய்து கொள்ளவும் சமஸ்கிருத மொழி மிகவும் அவசியமானதாகும்.

வால்மீகி எழுதிய இராமாயணத்திற்கு வால்மீகி இராமாயணம் என்று பெயர் வழங்குகிறது. வால்மீகி இராமாயணம் மிகவும் பிரபலமானது. இதர மொழிகளில் உள்ள இராமாயணங்களுக் கெல்லாம் பெரும்பாலும் வால்மீகி இராமாயணமே மூல நூலாக உள்ளது. வால்மீகி மகா முனிவர் இந்த மாபெரும் இதிகாசத்தை {{{pagenum}}}