பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதிகாசக் கதையை எழுதுவதற்கு முன்னமேயே இராமகாதை மக்களுக்கிடையில் வாய் வழியாக வாய் மொழியாக, செவி வழியாக சிற்சில வேறுபாடுகளுடன் பேசப் பட்டும், பாடப்பட்டும், கேட்கப் பட்டும் வந்திருக்கிறது. அவ்வாறு பாரத நாட்டின் பல பகுதிகளிலும் மக்களால் பாடப் பட்ட, பேசப் பட்ட இராமகாதை வடிவங்கள் விவரங்கள் பலவற்றையும் கேட்டும் அறிந்தும் அவைகளைத் தொகுத்தும் வால்மீகி மகாமுனிவர் இக்கதையை விரிவு படுத்தியும் அழகு படுத்தியும் பெரிய காவியமாக அற்புதமான இதிகாசமாக பாரத நாட்டின் தலை சிறந்த இலக்கியக் களஞ்சியங்களில் ஒன்றாகப் பாரதக் கலாச்சாரத்தின் பகுதியாக ஆக்கித் தந்துள்ளார்.

சக்கரவர்த்தி இராஜ கோபாலச்சாரியார் (இராஜாஜி) எழுதிய இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) என்னும் வசன நூலில் “வால்மீகி பகவான் இராமாயணம் பாடிய காலமும் ஸ்ரீராமச்சந்திரன் அவதரித்து இம்மண்ணுலகில் வாழ்ந்த காலமும் ஒன்றே என்பது புராணம் வாசிப்பவர்களுடைய பரம்பரைக் கொள்கை.உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால் வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தைப் பாடியதற்கு முன்னமேயே அதாவது புராதன காலம் தொட்டே சீதாராம சரித்திரம் மக்களிடையில் எழுத்து வடிவம் பெறாமலேயே பல நூற்றாண்டுகள் வாய் மொழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற் போல் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்

வால்மீகி முனிவர் பாடிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று கூறப் படுவதைப் போல, வட மொழியில் வசிட்டர் எழுதிய இராமாயணம் வசிட்டராமாயணம் என்றும் வியாசர் எழுதிய இராமாயணம் வியாசராமாயணம் என்றும் போதாயனர் எழுதிய இராமாயணம் போதாயன ராமாயணம் என்றும் வழங்கப் படுகிறது. அதைப் போலவே தமிழில் கம்பர் எழுதிய இராமாவதாரக் கதை கம்பராமாயணம் என்று வழங்கப் படுகிறது. இந்தி மொழியில் துளசிதாசர் எழுதியது துளசிராமாயணம் என்றும் இதர மொழிகளில் எழுதப்பட்ட இராமாயணக் காவியங்கள் அந்தந்த மொழியில் எழுதப் பட்டவர்களின் பெயர்களில் வழங்கப்படுகின்றன.

{{{pagenum}}}