பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சினிவாசன் |55 இவ்வாறு கோசலை பரதன் பெருமையை, மும்மையின் நிறை குணத்தவன், நின்னினும் நல்ல வன், குறைவில்லாதவன், என்றெல்லாம் பாராட்டி மன்னவன் கூறியது என்று கூறாமல் நீயே உன் தம்பிக்கு நாட்டைக் கொடுத்து விட்டு ஒற்றுமையாக ஊழிகாலம் வாழுங்கள் என்று கூறுகிறாள். இங்கு பரதன் சிறப்பு, கோசலை நால்வர் பாலும் ஒரே மாதிரியாகக் காட்டும் அன்பு, நால்வரும் ஒற்றுமையுடன் வாழும்படி கூறும் அவளுடைய அறிவுரை, ஆகியவற்றில் சகோதர ஒற்றுமை வலியுறுத்திக் காட்டப்படுகிறது. பரதனுக்கு நாடு என்று கூறியபோது மகிழ்ச்சியடைந்த கோசலை, இராமனுக்குக் காடு என்று கூறிய போது மிகுந்த வேதனையடைந்தாள். அதற்கு இராமன் தனது தாய்க்கு ஆறுதல் கூறி, “சிறந்த தம்பி திரு உற எந்தையை மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன், இதின் பிறந்து யான் பெறும் பேறென்பது யாவதே !” என்று இராமன் கூறும் போது “சிறந்த தம்பி திருஉற” என்று குறிப்பிட்டிருப்பது சகோதர அன்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். இலக்குவனும் இராமனுக்குத் தம்பி, அந்த இலக்குவனுக்குத் தனது அண்ணன் இராமன் மீது பற்று, பாசம், அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் அளவில்லாத பக்தியும் உள்ளதைக் காவியத்தில் காண்கிறோம். இலக்குவனுக்கு இதர இரு சகோதரர்கள் மீதும் அன்பும் பற்றும் பாசமும் மதிப்பும் மரியாதையும் அரவணைப்பும் இருந்தாலும் இராமனிடத்தில் தனியான அதிகமான அன்பும் மரியாதையும், பக்தியும் கொண்டவன். இலக்குவன் இராமனுடைய நிழல். எவராகிலும் ஏதாகிலும் இராமனுக்கு எதிராக இருப்பதாக அவனுக்கு மனதில் லேசாகப் பட்டுவிட்டாலும் போதும் அவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக சீறி எழுவான். எனவேதான் இராமனுக்குப் பட்டமில்லை என்று கேட்டவுடனேயே பொங்கி எழுந்தான். பரதன் மீதே கூடப்பழி கூறிவிட்டான். அதைக் கேட்ட இராமன் மனம் வருந்திப் பரதனை அவ்வாறு சொல்லாதே எனக் கேட்டுக் கொள்கிறான்.