பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்பிடுவதிலிருந்து வால்மீகி தனது காலத்திற்கேற்பத் தனது கதையைச் சிறந்த சொல் வன்மையுடன் சாதாரண மக்களுடைய மொழிப்பாங்கில் பிரபலமான முறையில் கதையை மிகவும் கம்பீரமாக மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துக் கூறியுள்ளார்.

“வால்மீகி இராமாயணம் கம்பீர நாதம் பொருந்திய ஒரு அற்புதமான நாதத்தோடும் சந்தத்தோடும் கூடிய செய்யுள் வடிவம்” என்றும் “மக்களின் துக்கங்களை ஈசுவரனும், ஈசுவரியும் மானிட ஜாதியில் பிறந்து தாமே நேரில் அனுபவித்துத் தருமத்தை உறுதிப் படுத்தி விட்டு மறைந்த இந்தப் புண்ணியக் கதையை வால்மீகி ரிஷி ஒப்பற்ற மதுரமான முறையில் பாடி உலகத்திற்குத் தந்தார்” என்று சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் தனது இராமாயணக் கதை வசனத்தில் குறிப்பிடுகிறார்.

அந்த வால்மீகி முனிவரின் கதையையும் கதைப் போக்கையும் கம்பன் எடுத்துக் கொண்டு அழகிய அற்புதமான தமிழ்க் கவிதைகளில் தனது “இராமாவதாரம்” என்னும் நூலைப் பாடியுள்ளர். கம்பன் தான் எழுதிய இராம காவியத்திற்கு இராமாவதாரம் என்னும் பெயரையே சூட்டியிருந்தார்.

"நடையினின்றுயிர் நாயகன் தோற்றத்தில்
இடை நிகழ்ந்த இராமாவதாரப்பேர் மாக்கதை"

என்று கம்பன் தனது காவியத்திற்குப் பெயர் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

கம்பன் தனது மாபெரும் காவியத்திற்கு வால்மீகி முனிவரின் கதைப் போக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. வால்மீகி முனிவருக்கு முன்பு வடபுலத்தில் எவ்வாறு இராமகாதை பற்றிய கதைகள் கவிதைகள் மக்களிடத்தில் பரவியிருந்தனவோ அதே போல கம்பனுக்கு முன்பு தென்புலத்திலும் வழக்கத்தில் இருந்த இராம காதை பற்றிய பல செய்திகளையும் எடுத்துக் கொண்டார்.

இராமசரிதம் கூறும் நூல்கள் தமிழில் பண்டய காலத்தே இயற்றப் பட்டிருந்தன. “பாரதஞ்சீராமகதை’ என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுதலால் சீராமகதை எனவும் முன்னோர்கள்