பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்வில்வலித்து முது பெண்ணுயிர் உண்டான்
தன்வில்லின் வன்மையைப் பாடிப்பற”

என்றும் பெரியாழ்வார் இராம கதையின் நிகழ்ச்சிகளைத் தனது பாசுரங்களில் குறிப்பிடுகிறார்.

இன்னும் பெரியாழ்வார் “சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளம்' என்னும் தலைப்பில் ஒரு தனியான பாடல் தொகுப்பே பாடியுள்ளார்.

“கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?”

என்றும்,

“சென்றங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திரல் போற்றி”

என்றும் பட்டர்பிரான்கோதை தனது திருப்பாவைப் பாடல்களில் குறிப்பிடுவதைக் காணலாம். இன்னும் இதர ஆழ்வார்களும் தங்கள் பாசுரங்களில் இராமன் கதை நிகழ்ச்சிகள் பலவற்றையும் குறிப்பிட்டு பாடியுள்ளார்கள்.

இது போல் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் இராம காதை நிகழ்ச்சிகளைப் பற்றிய பல குறிப்புகளும் உள்ளன. அத்துடன் தமிழகத்தில் பல இடங்களிலும் கிராமப்புறங்களிலும் இராம நாடகம் மற்றும் கூத்துகள், கலைநிகழ்ச்சிகள் மூலமும் இராமகதை பரவிவந்துள்ளது.

மேலும் பல இராமாயணக் கதை நூல்கள் தமிழில் இருந்தது பற்றியும் பல ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். கம்பன் தனது காவியத்தை எழுதுவதற்கு அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தில் நிலவியிருந்த பல இராமாயண நூல்கள், பாடல்கள், மக்களின் செவி வழிச் செய்திகள் நாட்டுப்புறப் பாடல் குறிப்புகள் முதலிய பல ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு, சிறந்த முறையில் தனது காவியத்தை அமைத்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.

“இவ்விராமாவதாரத்தில் கம்ப நாடர், முக்கியமாக வான்மீகத்தையே தமக்கு முதநூலாகக் கொண்டவரேனும் வடமொழியினும்