பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை- அ. சீனிவாசன் 197 நோக்கத்துடன் நம்மை நோக்கி வருகிறான் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று இலக்குவனிடம் தங்கள் குலத்தின் சீலத்தையும் பெருமையையும் அருங்குணங்களையும் பரதனின் தனிச் சிறப்புகளையும் எடுத்துக் கூறுகிறான். பரதனைச் செம்மையின் ஆணி எனக் குறிப்பிட்டு அத்தகைய பரதனை நீ தவறாகக் கருதலாமா என்று இலக்குவனுக்கு அறிவுரை கூறி அவனை இராமன் அமைதிப் படுத்துகிறான். இராமனுடைய அறிவுரைகளைக் கேட்டும் பரதனுடைய சோகம் மிகுந்த வடிவத்தைக் கண்ணாரக் கண்டும், அதன் பின்னர் இலக்குவன் அமைதிப்பட்டு நின்றான். “எல்ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் மல்ஒடுங்கிய புயத்தவனை வைது எழும் சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர வில்லொடும் கண்ண நீர் நிலத்து விழவே” என்று கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. பரதன் - இராமன் சந்திப்பு, வனத்தில் அவர்களுக்கிடையில் நடைபெற்ற விவாதம் வாக்குவாதம் உடன்பாடு ஆகியவை பற்றி ஏற்கனவே சகோதரன் பரதன் பற்றிய விவரத்தில் கண்டுள்ளோம். இந்தக் காட்சி இராமாயணக் கதையில் ஒரு சிறப்பான இடமாக அமைந்துள்ளதை ஏற்கனவே விவரமாகப் பார்த்துள்ளோம். இங்கு சகோதரன் இலக்குவனுடைய சிந்தனைப் போக்கு, பக்குவ நிலை, தப்பெண்ணம், தெளிவு நிலை ஆகியவற்றைக் காண்கிறோம். இராமன் நாடிழந்ததற்கும் காடு செல்வதற்கும் கூனியின் சூழ்ச்சியும் அதற்கு இரையான கைகேயிதான் காரணம் தசரதனல்ல என்பதை இலக்குவன் முதலில் அறிந்திருக்கவில்லை. அதனால் இலக்குவனுக்குத் தன் தந்தை மீது கடுங்கோபம் இருந்தது. இராமனுக்குப் பட்டம் மறுக்கப்பட்டதற்கும் காடு செல்ல ஆணையிடப்பட்டதற்கும் பரதனுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பது பற்றியும், பரதன் அந்த ஏற்பாட்டைத் துளியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பற்றியும் இலக்குவன் அறிந்திருக்கவில்லை. அது பற்றி இலக்குவனுக்கு ஒருதப்பெண்ணமேயிருந்தது.