பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன்} பாவனைகள், நீதி நெறி முறைகள், ஒழுக்க நெறி முறைகள், ஆட்சி முறைகள், சட்டநீதி விதி முறைகள், முதலிய சமுதாய அடித்தளங்களும் மேல்க் கட்டுமானங்களும் மாறும் போது இலக்கியங்களின் தரமும் தன்மையும் கட்டுக் கோப்புகளும் மாறியும் வளர்ச்சி பெற்றும் வந்துள்ளன என்பதையும் காண்கிறோம்.

பேராசிரியர் சங்காலியா பெரும்பாலும் வால்மீகி இராமாயணத்தையும் வட புலங்களில் நிலவி வந்த இராம கதைகளையும் ஆய்வு செய்தும், பழங்கால இந்திய சமுதாய இனக் குழுக்களைப் பற்றி ஆய்வு செய்தும் பல அரிய கருத்துக்களையும் கண்டு பிடிப்புகளையும் தனது நூலில் எழுதியுள்ளார். இந்திய சமுதாயத்தின் பழங்கால சமுதாய அமைப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவருடைய ஆய்வுரைகள் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

பேராசிரியர் சங்காலியாவினுடைய ஆராய்ச்சியும் சிந்தனையும் மேற்கத்திய ஆராய்ச்சி மற்றும் சிந்தனை வழி முறையில் உள்ளதாகும். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் களம் ஐரோப்பிய சமுதாயங்களையும், அமெரிக்க சமுதாயங்களையும் கொண்டதாகும். இந்திய சமுதாயத்தில் பழங்குடி மக்கள் என்று கூறுவது பொருந்தாது. அவர்கள் வனவாசிகள் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள்.

பாரத சமுதாயத்தில் இனக்குழுக்குள் இனக் கூட்டங்கள் என்பது மிக மிகப் பழைய செய்தியாக இருக்கலாம். இங்கு குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் என்னும் நில அமைப்புகளும் அதன் மக்களும் தான் பூர்வீக மக்கள். வேத காலத்திற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி வளர்ந்தது பாரத சமுதாயம்.

இராமனுடைய முன்னோர்கள் பல தலை முறையினர் அயோத்தியை ஆண்ட வரலாறும் அதே போல இராவணனுடைய முன்னோர்களும் பல தலைமுறையினர் இலங்கையை ஆண்ட வரலாறு உண்டு.

எனவே பேராசிரியர் சங்காலியாவின் ஆராய்ச்சியும் சிந்தனையும் பாரத மண்ணுக்கு ஏற்புடையதல்ல.