பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. கம்பநாடரும் "இராமாவதாரக் காவியமும்"

இராமாயணக் கதைப் போக்கில் கதா பாத்திரங்களைப் பற்றிய நிர்ணயிப்பில் இதர பல நிகழ்ச்சிப் போக்குகளின் விவரிப்பில் வால்மீகி முனிவருக்கும் கம்ப நாட்டாழ்வாருக்கும் கூட சில வேறுபாடுகள் காணப்படுவதைப் பலரும் எடுத்துக் கூறியுள்ளார்கள், சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

வால்மீகி மாமுனிவருக்கும் கம்பருக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு மிகவும் அடிப்படையான வேறுபாடுகளில் ஒன்றாகும். வால்மீகி முனிவர் இராமபிரானைக் கடவுளாகக் கருதவில்லை. ஒரு தலை சிறந்த எல்லா நற்குணங்களையும் கொண்ட வீரனாகச் சிறந்த அரச குமாரனாகவே கருதித் தனது பாத்திரப் படைப்பை அமைத்தார். ஆனால் கம்பனோ இராமனைத் திருமாலின் அவதாரமாகவே, தான் வழிபடும் குல தெய்வமாகவே வரித்துக் கொண்டார். அதற்குரிய வகையில் கம்ப நாட்டாழ்வாரின் கதைப் போக்கு அமைந்துள்ளதைக் காணலாம்.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனது இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) என்னும் நூலில் வால்மீ கியும் கம்பரும் என்னும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமருடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும் இங்கும் அங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதார விஷயத்தைச் சொல்லி வந்தாலும் மொத்தத்தில் வால்மீகி இராமயணத்தில் காணப் படும் இராமன் ஒரு சிறந்த இராஜகுமாரன். வீர புருஷன், ஆபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன், அம்மட்டே. கடவுளாக வேலை செய்யவில்லை.

“வால்மீகி முனிவரின் காலத்திலேயே றுநீ ராமனைப் பற்றிய அவதாரக் கொள்கை ஒரளவு ஜனங்களின் மனதில் இருந்து வந்தது. வால்மீகி ராமாயணம் இயற்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கம்பரும், துளசிதாசரும் ராமாயணம் பாடினார்கள். இதற்குள் பூரீ ராமன் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்பது நாட்டில் நன்றாக ஊர்ஜிதப் பட்டுப்போன கொள்கையாகி விட்டது. ராமன் என்றாலும் கிருஷ்ணன் என்றாலும் மகாவிஷ்ணுவே. மகாவிஷ்ணு என்றால் ராமனே, கிருஷ்ணனே. இந்த நிலைக்கு ஜனங்களின் கொள்கை வந்து விட்டது. இதற்கு ஏற்ப பக்தியும் கோயில்களும் வழிபாடும் ஏற்பட்டு ஸ்திரமாகி விட்டன.