பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சினிவாசன் 15

“மக்களுடைய வழிபாடும் நம்பிக்கையும் இவ்வாறு பரிணமி -த்து விட்ட பிறகு கம்பரோ, துளசிதாசரோ மீண்டும் ராமனை எப்படி வெறும் வீரனாக வைத்துப் பாட இயலும்? அப்படிப் பாட முயன்றாலும் அது வீணாகும். கம்பரும், துளசிதாசரும் பரிபூரண பக்தர்கள். ஆழ்வார்களேயாவார்கள். அவர்கள் தற்கால சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அல்லது நெடுங்கதை எழுத்தாளர்களைப் போன்றவர்கள் அல்ல. ராமாவதாரத்தை வால்மீகியைப் போல் வெறும் ஒரு வீர புருஷனைப் பற்றிய கதையாக எழுத முடியாத நிலையிலும், காலத்திலும் கம்பரும், துளசிதாசரும் பாடினார்கள். ராமனை மானிடப் பிறவியில் அடக்கக் கம்பருடைய பக்தி இடம் தரவில்லை. ஆனபடியால் கம்பராமாயணத்தில் அடிக்கடி மிக ரசமான இடங்களில் ராமன் மகா விஷ்ணுவே, கடவுளே, அனைத்திலும் பரவி நிற்கும் பரம் பொருளே என்று வைத்து மனத்தை உருக்கும் முறையில் அற்புத அழகோடு பாடியிருக்கிறார்.

“காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு உண்மைக் கவிஞர்கள் பாட முடியுமே ஒழிய வெறும் வற்றல் ஆராய்ச்சிகளைப் பாட்டாகப் பாட மாட்டார்கள்.”

காலத்தாலும் சமூக வளர்ச்சியாலும் சூழ்நிலைகளாலும் சமூக அறிநெறி மற்றும் ஒழுக்க நெறிகளாலும் வால்மீகியும், கம்பரும் வேறு பட்டவர்கள். எனவே அதற்குரிய முறையில் ஒரே கதையானாலும் இருவரின் கதைப் போக்குகளும் பல மாற்றங்களையும் வேறு பாடுகளையும் கொண்டிருக்கின்றன என்பதைக் காண்கிறோம்.

காடு மலைகளில் வாழும் இனக்குழுக்களாக இருந்த பழங்குடி மக்களில் பல பிரிவுகளும் கனிகளையும், கிழங்குகளையும், இதர இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருள்களையும் சேகரித்தும் வேட்டையாடியும், வாழ்ந்து கொண்டிருந்த நிலையிலிருந்து, வளர்ச்சி பெற்று ஆடுமாடுகளை மேய்த்தும் கால்நடைகளைப் பராமரித்துக் கொண்டும் காலப் பயணத்தில் மேய்ச்சல் நிலங்களையும் ஆற்றுப் பகுதிகளையும் தேடிச் சென்று கொண்டு நாகரிக வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வேதங்கள், உபநிடதங்கள் தோன்றி அறிவும் செல்வமும் கல்வியும் பெருகி அவைகளுக்குரியவர்களாக பிராமணர்கள் சமுதாயத்தின் தலைவர்களாக வழிகாட்டிகளாகக் கருதப் பட்டார்கள்.