பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. கம்பநாடரும் "இராமாவதாரக் காவியமும்’ 16

மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்று கொண்டிருந்த மக்கள் கூட்டம் பல செழிப்பான பகுதிகளில் நிலை பெற்று நிரந்தரமான மக்கள் குடியிருப்புகளும் குறுநிலக் கூட்டங்களும், சிறு நிலக் கூட்டங்களும், அரசுகளும் தோன்றி வளர்ந்தன. அந்த அரசுகளின் அதிபர்களாக, தலைவர்களாக, காவலர்களாக அரசர்கள் தோன்றி நிலை பெற்றார்கள். சமூக வாழ்வில் வேட்டையாடுதல், கால்நடை பராமரித்தல் ஆகியவற்றுடன் சாகுபடித் தொழிலும் வளர்ச்சியடைந்து நிலை பெற்றது. உபரியாக உற்பத்தியும், வாணிபமும் கைத்தொழில்களும் பெருகி வளர்ந்தன. அத்தகைய உற்பத்தி முறைகளில் ஈடுபட ஏராளமான மக்கள் கூட்டம் தேவைப் பட்டது. அப்போது குலப் பிரிவுகளும் உருவாக்கப் பட்டு அவரவர்களுக்குரிய கடமைகளும் வகுக்கப் பட்டன. அக்காலத்தில் நீதி நூல்களும் பொருள் நூல்களும் இதிகாசங்களும் புராணங்களும் தோன்றின. இந்த இதிகாசங்களிலும், புராணங்களிலும் அரசர்கள் முதன்மைப் படுத்தப் பட்டார்கள். அரச நீதியும் அரசியலும் சமுதாயத்தில் முக்கிய இடம் பெற்றது.

பாரதியார் தனது பகவத் கீதை மொழி பெயர்ப்பு நூலுக்கு எழுதிய முன்னுரையில் “வேதங்கள் எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவேயாயினும் பிராம்மணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அது போல புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன” என்று குறிப்பிடுகிறார்.

வேதங்கள், உபநிடதுங்கள் காலத்தில் வணக்கத்திற்கும், வழி பாட்டிற்கும், யாகங்களுக்குமுரிய கடவுளர்களாக இந்திரன், வருணன், அக்னி, வாயு, முதலியோர்கள் மதிக்கப் பட்டார்கள். புராணங்கள் இதிகாசங்களின் காலத்தில் வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரிய கடவுளர்களாக சிவபெருமான், பிரம்மா, திருமால் ஆகியோர் சமுதாயத்தில் முக்கிய இடம் பெற்றனர். அத்துடன் சக்தி வழிபாடும் தொடர்ந்தது. அரசர்கள் திருமாலின் வடிவமாக, சமுதாயத்தில் முக்கிய இடமும் மதிப்பும் பெற்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் தொடக்க காலத்தில் பழைய நாட்டுப் புற இனக்குழு அமைப்புகளில் பரவியிருந்த பல கதைகளும் பெரிய வடிவங்களைப் பெற்று மன்னர்களை மையமாகக் கொண்ட பல பெரிய புராணக் கதைகளும், இதிகாசப் பெருங்கதைகளும்