பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சினிவாசன் 17 தோன்றின. பாரத நாட்டில் பிரபலமாக இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்களாக எழுந்தன. அதில் இராமாயணப் பெருக்கதையைப் பலர் பாடியும் அவைகளில் முக்கிய இடம் பெற்று வால்மீகி இராமாயணம் பிரபலமடைந்தது. இப்பெருங்கதை பெரிய இதிகாசமாக அக்காலத்தின் சிறப்புகளையும் குறிக்கோள்களையும் பிரதி பலிப்பதைக் காணலாம். இராமாயண காவியத்தை முன்னர் எழுதியவர்களிலிருந்து கம்பர் காலத்தால் பிந்தியவர். கம்பநாடர் காலத்தில் தமிழகம் செல்வ வளமும் கல்வியும் நாகரிகமும் பெற்று உயர்ந்திருந்தது. தொண்டை நாடு, சோழவளநாடு, தென் தமிழ்ப் பாண்டியநாடு, சேரமலைநாடு என்று பெருநில நாடுகள் வளர்ந்த அந்த நாடுகளில் மன்னராட்சி முறை தோன்றி வளர்ந்து நிலை கொண்டு உயர்ந்திருந்தது. இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் மன்னராட்சி முறை நிலை பெற்று அவற்றை விரிவு படுத்த பல மன்னர்களும் பாடுபட்டு பல போர்களையும் நடத்தித் தங்கள் நாடுகளின் எல்லைகளையும் ஆட்சிகளையும் விரிவு படுத்தியும் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டினார்கள். இவ்வாறு பல பேரரசுகளும் உருவாயின. மன்னராட்சி முறையின் அரசியல், ஆட்சிமுறை, நீதிநெறி, ராஜதந்திர சூழ்ச்சி முறைகள், போர்முறை, போர்நெறி, போர்வியூக முறை, அணி சேர்க்கை உத்திகள் உபாயங்கள், சமூக நீதி, சமூக ஒழுக்க நெறி முதலிய பலவகை நெறிமுறைகளும் வகுக்கப் பட்டு அவைகளை செயல் படுத்துவதற்கான முயற்சிகளும் வளர்ந்து கொண்டிருந்தன. கால்நடைகள் பராமரித்த்தல், மீன் பிடித்தல், விரிவான நிலப் பகுதிகளை சாகுபடியின் கீழ் கொண்டு வருதல், நீர்ப்பாசன முறைகளைப் பெருக்குதல், கிராமத் தொழில்களை வளர்த்தல், ஆடை ஆபரணங்களைச் செய்தல், உலோகம் உருக்குதல், உலைகள், பட்டறைகள் அமைத்துப் பலவேறு கைத்தொழில்களைச் செய்தல், ஆயுதங்கள் செய்தல், நீர்வழி தரைவழிப் போக்குவரத்தை விருத்தி செய்தல், வாணிபம், ஆடல் பாடல் கலை இலக்கியம் முதலியன பெருகிக் கொண்டிருந்தன. ஆற்றங்கரை நாகரிகம் வளம் பெற்று சிறப்படைந்து கொண்டிருந்தது.