பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 297 தமிழில் ஒரு பெயர் உள்ளது. காவல் என்றால் மிருகங்களின் தாக்குதல்கள், இயற்கையின் சீற்றங்கள், வெளிநாட்டுப் படையெடுப்புகள், உள்நாட்டுக் கலவரங்கள், தீய சக்திகளின் தாக்குதல், சமூக விரோதக் குற்றங்கள் முதலிய வற்றிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதாகும். இந்தக் கடமைகளைச் செய்வதற்கு அரசனுக்கு வரி வசூல் செய்யும் அதிகாரம் ஏற்பட்டது. அந்த வரிவசூல் என்பது மக்கள் தங்கள் உற்பத்தியில் ஒரு பகுதியை அரசனுக்குக் கொடுப்பதாகும். அதற்கு அரச பாகம் என்று பெயர் ஏற்பட்டது. அது பொதுவாக நமது நாட்டில் ஆறில் ஒரு பாகம் என்று சராசரியாகத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. அதுவே நியாயமான அரச பாகமாகும். செங்கோல் ஆட்சியின் பங்காகும். அதைப் பத்தில் ஒரு பாகமாகக் குறைத்த மன்னர்களும் உண்டு. மூன்றில் ஒரு பாகமாக உயர்த்தியவர்களும் உண்டு. மக்களிடமிருந்து வரி வசூல் செய்யும் போது அதை நோகாமல் செய்த மன்னர்களும் உண்டு, அதைக் கொடுமையான முறையில் செய்த மன்னர்களும் உண்டு. நாட்டைக் காப்பதோடு நில்லாமல் சில அரசர்கள் தங்கள் அரசுகளின் எல்லைகளை விரிவு படுத்திக் கொள்வதற்காகவும் படை திரட்டி மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து அந்த நாட்டு மண்ணையும் அபகரித்துத் தங்கள் நாட்டின் எல்லைகளையும் பரப்பையும் விரிவு படுத்திக் கொண்டார்கள். அவ்வாறு மன்னராட்சி முறை இருந்த காலத்தில் அரசர்கள் எண்ணற்ற போர்களை நடத்தியிருக்கிறார்கள். அவைகளில் ஆக்கிரமிப்புப் போர்களும், தற்காப்புப் போர்களும் இருந்தன. அத்தகைய போர்களை நடத்துவதற்கு ஏராளமான பொருள் தேவைப் படுகிறது. அதற்காக அதிகமான அளவில் வரி வசூல் செய்தார்கள். வரிகளை அதிகமான அளவில் வசூலித்துப் படையைப் பெருக்கி, போர்களை நடத்தினார்கள். அப்போர்களினால் எண்ணற்ற உயிர்களும், பொருள்களும் நாடு நகரங்களும் தோட்டம் துறவுகளும் பண்பட்ட விளை நிலங்களும் இதர உற்பத்தி சாதனங்களும் கால் நடைச் செல்வங்களும் இதர செல்வங்களும் சேதமடைந்துள்ளன, நாசமடைந்துள்ளன. இத்தகைய இருவகைக் கொடுமைகளால் அதாவது வரிவசூல் கொடுமைகள், போர்க் கொடுமைகள் ஆகியவற்றால் மக்களும் சொல்லொணாத் துன்ப துயரங்களுக்காளானார்கள்.