பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கம்பன் ஒரு சமுதாயப் பார்வை

பதிப்புரை

உலக இலக்கியத் துறையில் இதிகாசங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. அவைகளில் கிரேக்க இதிகாசங்களும் இந்திய இதிகாசங்களும் உலகப் புகழ் பெற்றவை. அவை மக்களுடைய உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கின்றன.

இந்திய இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் தனித்தன்மை பெற்றவை. சிறப்பு மிகுந்தவை. தெய்வீகத் தன்மை பெற்றவை. இந்திய மக்களின் குடும்ப விளக்குகளாக அமைந்துள்ளவை. இந்த இதிகாச நாயகர்களான இராமனும் கண்ணனும் பாரதநாட்டு மக்களின் குல தெய்வங்கள்.

ஐரோப்பிய மக்களுடைய வாழ்க்கைக்கும், சிந்தனைக்கும், அறிவிற்கும் கிரேக்க இதிகாசங்களும், இலக்கியங்களும், சாத்திரங்களும், தத்துவ ஞானக்கருத்துக்களும் அடித்தளமிட்டிருக்கின்றன. அதைப் போலவே இந்திய இதிகாசங்களும், இலக்கியங்களும், சாத்திரங்களும், தத்துவ ஞானக்கருத்துக்களும் சமயங்களும் மரபுகளும் பாரத கண்டத்தின் மக்களுடைய வாழ்க்கை முறைகளுக்கும் சிந்தனைக்கும், அறிவுத் துறைக்கும் அடித்தளமிட்டிருக்கின்றன. அவைகளின் செல்வாக்கு வீச்சு ஆசியா முழுவதற்கும் பரவியிருக்கின்றன.

மனிதன் ஆண்டவனுடைய சிறப்பான படைப்பு என்றும், மனிதனுக்காகவே உலகிலுள்ள அனைத்தையும் ஆண்டவன் படைத்துள்ளான் என்றும் சில ஐரோப்பிய, அராபிய சிந்தனையாளர்கள் கூறுவர். அந்த வட்டத்திற்கு வெளியே சென்று இந்திய சிந்தனை ஆண்டவனுடைய படைப்பிலுள்ள அனைத்தையும் ஒன்றிணைத்திருக்கிறது. மனிதப் பிறவி சிறப்பு மிக்கது, அதிலும் தனிச் சிறப்பு மிக்கது என்றாலும் இதர பிறப்புகளையும் மனிதனையும் பேதம் பார்க்காமல் இந்திய சிந்தனை ஒன்றிணைத் திருக்கிறது, இயற்கையின் பகுதியாகவே மனிதனைக் கண்டிருக்கிறது.

{{{pagenum}}}