பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

படக் கூறும் அரசியல் நெறி முறைகள், நந்தி கிராமத்தின் ஆட்சி முறை, கிட்கிந்தையில் நடைபெறும் அரசியல் உரையாடல்கள், இலங்கையில் நடைபெறும் போர், போர்க்கால அரசியல், போர் வியூகங்கள் முதலியன பற்றியெல்லாம் கம்பன் மிகவும் சிறப்பாகக் கையாளுவதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மாமன்னன் தசரதனுடைய ஆட்சி காலத்தில் கோசலமும், அயோத்தி நகரமும் சீரும் சிறப்புமாக இருந்த ஒரு அருமையான ஒரு நிறைவான சமுதாயக்காட்சியைக் கம்பன் மிகவும் அற்புதமாகச் சுட்டிக் காட்டுவதை இந்நூல் விவரிக்கிறது.

இராமனுடைய அமைதியான அறவழி, இலக்குவனுடைய வேகம், பரதனுடைய பண்பட்ட செம்மை, வாலியின் பெருந்தன்மையான சிந்தனை, அனுமனின் அடக்கமும் சொல்லாற்றலும், இராவணனுடைய கம்பீரம், இந்திரசித்தனுடைய சாகசங்களும் சூரத்தனமும், கும்பகர்ணனுடைய கடமை உணர்வு, வீடணனுடைய நெறி பிறழாத அறநிலை, முதலியவை பற்றியெல்லம் மிகவும் சிறப்பாகக் கம்பன் விவரிக்கிறார்.

மேலும், கூனியின் விடாப்பிடியான முயற்சி, கைகேயின் அரசியல் நிலை மாற்றம், சூர்ப்பணகையின் சாகசங்கள், தனமாலை வெளிப்படுத்தும் அனுபவக் கருத்துக்கள், மண்டோதரியின் அமைதி, சீதையின் சிறைவாசம், பொறுமை, மிக உயர்ந்த கற்பு நிலை, முதலிய அரிய மாந்தரின் சிறப்புகளையெல்லாம் அரசியல் நிலைக்கு உயர்த்திக் கம்பன் கூறுவதையெல்லாம் இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

அத்துடன் அரசு, அமைச்சு, துது, படை காத்தல் முதலியவை பற்றியெல்லாம் மிக நுட்பமான கருத்துக்களையெல்லாம் கம்பன் எடுத்துக் கூறுவதையெல்லாம் இந்நூல் மிக விரிவாக வடித்துக் காட்டுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கம்பன் தனது மகா காவியத்தில் தனது ஆழ்ந்த தமிழ்ப் பற்றைச் சிறப்பாக வெளிப்படுத்துவதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கங்கையும் காவிரியும், இமயமும் விந்தியமும் பொதிகையும் கம்பனுடைய காவியத்தில் இணைந்து இடம் பெறுகின்றன. தமிழின் சிறப்பை உச்சத்திற்குச் கொண்டு