பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


விளங்கிக் கொண்டிருக்கிறது. நாகரிகத்தில் வளர்ந்த மக்கள்; இயல், இசைப் பயன் துய்த்து மகிழ்ந்து வாழ்வர். கேள்வி ஞானம் வளரும். நாட்டு மக்கள், ஆழ்ந்து அகன்ற பல்துறை அறிவுடையோராக விளங்குவர். அயோத்தி நாட்டு மக்கள் செவியிற் சுவையுணரும் கேள்வியை ‘மருந்தினும் இனியது என்று மாந்துவார்’ எனக் கம்பன் சொல்லும் அருமை நோக்குக. திருவள்ளுவரும் கூடக் கேள்வியைச் ‘செவிச் செல்வம்’ என்றார். கம்பன் பிணி அகற்றும் மருந்தினும் இனியது என்று கூறுவது உற்றறிதலுக்குரியது. அறியாமைக்குக் கேள்வி ஞானத்தைப் போல் பிறிதொரு மருந்தில்லை.

‘வெண்மை இல்லை; பல் கேள்வி மேவலால்’ என்று கூறுவதையும் ஒப்பு நோக்குக. விருந்தினரை ஓம்பலும், விழாக்கள் நிகழ்த்தலும், நல்ல நாட்டின் நிகழ்வுகள், அடையாளங்கள்.


“பொருந்திய மகளி ரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல் சென் றன்ன
இயல்இசைப் பயன்துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவியுற மாந்து வாரும்
விருந்தினர் முகங்கண் டன்ன
விழாவணி விரும்பு வாரும்”

(கம்பன்-46)

என்று பாடுகிறான் கம்பன்.

நமது நாட்டில் பெண்களுக்குக் கல்வி தருதல் என்பது இன்று ஒரு பெரிய பிரச்சினை. நமது நாட்டில் பெண்களில் படித்தவர்கள் 24.8% பேர். பெண்களில் இந்த அளவுக்குப் படித்தவர்கள் உருவானதற்குக் காரணம் பெண்கள் முன்னேற்ற இயக்கம், பாரதியின் பாடல்கள் ஆகியனவாம். பழந்தமிழகத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது; ஆட்சியுரிமையும் கூட இருந்தது. இதற்கு மதுரை