பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்19

மீனாட்சியம்மன் கோயில் சான்று. சமுதாய நடைமுறைகளே திருக்கோயில்களிலும் அமைகின்றன என்பதை நினைவிற் கொள்க. நமது சுதந்திரக் குடியரசின் அரசியல் சட்டத்தில் பெண்களுக்கெனக் கல்விக்கும் சொத்துடைமைக்கும் விதிகள் இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் 10 விழுக்காட்டுப் பெண்களுக்குக்கூட இந்தியாவில் சொத்துரிமை இல்லை. ஆனால், அயோத்தியில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர் என்று கம்பனின் காவியம் கூறுகிறது. இது பற்றிப் பாடும் பாடலில் கம்பன், ஒரு வாழ்வியல் தத்துவத்தை— உண்மையைக் கூறுகின்றான். பிறர் வருத்தத்தை மாற்ற, செல்வம் கருவி, அறிவு உடையோரே பிறர் வருந்தும் வருத்தம் அறிவர். மனிதம் போற்றும் அறிவில்லாதவர்களிடம் செல்வம் இருந்தாலும் பிறர் துன்பம் மாற்றார். இவ்விரண்டில் செல்வம் இல்லாது போனாலும் அறிவு இருந்தால் முயன்று, மற்றவர் துன்பத்தை மாற்றுவர். பிறருடைய வருத்தத்தை மாற்றும் முயற்சியினையே ‘நோன்பு’ என்று தமிழ் நெறி கூறுகிறது. ‘பிறர்க்கென முயலா நோன்றாள்’ என்பது புறநானூறு. பிறிதின் நோய்— பிறர் வருத்தம் பொறா மனம் அறிவுடையோருக்கே உண்டு என்ற கொள்கை கம்பனுடையது. கோசல நாட்டுப் பெண்கள் வருந்தி வந்தவர்க்கு ஈதலிலும், விருந்து ஓம்புதலிலுமே ஈடுபட்டுள்ளனர். கோசல நாட்டில் ஏற்றுமதி— இறக்குமதி பெருகி வளர்ந்திருந்தன. வளம் கொழிக்கும் நிலம், கோசல நாட்டு மக்கள் ஒழுக்கம்; சிறந்த குலமரபினர் என்றெல்லாம் புகழ்கின்றான் கம்பன்.

ஒழுக்கம் சிறந்த மக்களைப் பெற்றுள்ள நாடே வளரும் நாடு. இதனால் ஆட்சிச் செலவு குறையும். குலம், குடி என்ற சொற்கள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. குலம் வேறு, சாதி வேறு. சமூக அமைவுக்கும் குடும்ப அமைவுக்கும் இடையில் அமைந்து விளங்குவது குலம் என்பது. இது வழிவழியாகச் சிறந்து விளங்கி வரும்