பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


தலைமுறையைக் குறிக்கும். குலத்திற்குத் திருக்குறள் மிகவும் ஏற்றம் தருகிறது. கம்பனும் ‘குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்’ என்று விளக்குகின்றான். ஒழுங்குகள், ஒழுக்கங்களாக உருப்பெறுகின்றன. ‘நல்ல ஒழுங்குகள்தான் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை’ என்றார் எட்வர்டு பர்க்,

ஒருவன், தான் பிறந்து வளரும் குடும்பம், குலம், ஊர், அந்நாட்டு அரசின் நடைமுறை இவைகளுக்கேற்பவே உருவாகின்றான்; உருவாக்கப்படுகின்றான். ‘ஒழுக்கத்திற்குப்’ பிறப்பின் சார்பு காரணம் என்பதைச் சேக்கிழார்,

“பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான்”
(பெரிய புராணம், கண்ணப்பர்-8)

என்று பாடுவார். ஒழுங்கு என்பது கட்டுப்பாட்டுடன் வாழ்தல். சுதந்திரம் இல்லாத கட்டுப்பாடு அடிமைத்தனத்தைத் தோற்றுவிக்கும். கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் அராஜகத்தைத் தோற்றுவிக்கும். ஆதலால், கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே கடலும் பாலைவனமும் உருவாகின்றன. ‘நல்நடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே!’ என்றது புறநானூறு. இன்றைய அரசுகள் மக்களை இரவலர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் குடிகாரர்களாகவும் ஆக்க முனைகின்றன. கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். கம்பன் காட்டும் கோசல நாட்டில்,

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் யுரைஇ லாமையால்
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்”

(கம்பன்-84)