பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்23

வீரத்தின் பேரால் பொய்மையான மானத்திற்கு அஞ்சி, இராவணன் கடைசிவரையில் போரிட்டு அழிந்தான் என்பதுதான் உண்மை.

இராமன் இளவரசன். விளையாடிவிட்டு அரண்மனைக்கு திரும்பும் பொழுது தேரூர்ந்து வருகின்றான். தேரோடும் வீதியின் இருமருங்கிலும் தன்னைக் காணக் கூடியிருக்கும் மக்களைக் கண்டவுடன் தேரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி நடந்து வந்து அணுகுகின்றான். மக்களிடம், ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? துன்பத் தொடக்கில்லாமல் வாழ்கின்றீர்களா? உங்களுடைய மனை வளமாக அமைந்திருக்கின்றதா? உங்களுடைய பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குகின்றார்களா? வலிமையுடையோராக வாழ்கின்றார்களா?’ என்றெல்லாம் கேட்டறியும் பாங்கினை நோக்கின்— கோசல நாட்டுப் பேரரசு, மக்கள் நல அரசாகவே விளங்கியது என்பது மட்டுமல்ல, இன்றைய மக்களாட்சி முறை அரசுகளை விடக் கூடச் சிறந்து விளங்கியமையை உய்த்துணர முடிகிறது.


எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிர
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?’ எனவே!

(கம்பன்-311)

என்ற பாடல் இங்கே நினைந்து நினைந்து நோக்கத் தக்கது.

அயோத்திப் பேரரசு நடுவுநிலை பிறழ்ந்ததாக வரலாறு இல்லை. நல்ல அமைச்சர்கள், பேரரசனைச் சூழ்ந்து நன்னெறியில் அரசை உய்த்துச் செலுத்தினார்கள்.

நடுநிலை பிறழாத அரசு

அயோத்திப் பேரரசு வீரமும் வளமும் திருவும் பெற்று விளங்கினாலும் அதற்கு யாரோடும் பகை கொள்ளும் பழக்கமும் இல்லை; வழக்கமும் இல்லை.