பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்31

மனிதனாகக் கருவிகள் சுமக்காத உடலையும் இராமன்பால் கொண்ட அன்பு நெஞ்சத்தினையும் சுமந்து கொண்டு, இராமன் இருக்கும் இடத்திற்குச் செல்கின்றான் குகன். போர்க் குகன், ஆயிரம் நாவாய்க்குரிய தலைவன். ஆயினும் அடக்கம், எளிமை, பத்திமைப் பண்பு மிகுந்தவன். இராமனைக் கண்ணினால் நோக்கிக் கனிந்தனன், மண்ணுறப் பணிந்து வணங்கினான். கையினால் வாய் புதைந்து நின்றான். இராமனை, தன் உயிர் தந்து காப்பேன் என்று உறுதி கூறினான்; ஆனால் இராமன் ‘நீ இந்த உலக முழுவதும் உடையாய்’ என்று சொல்லி ‘நான் என்றும் உனக்கு உரிமையுடையேன்’ என்று ஆறுதல் கூறினான். ஆக, குகன் நெடுந்தானையுடைய அரசனாக இருந்தும் அவனுடைய எளிமையை நோக்கும் போது, அமைதி தழுவிய அரசு கங்கைக்கரை அரசு என்று தெரிய வருகிறது.

“புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவன் மாக்களின் பணி மொழி பயிற்றி”

என்ற சங்கப் பாடலுக்கு இலக்கணமாகக் குகன் அமைந்திருந்தான்.

போர்க் குகனின் படகுத் துணை கொண்டு இராமன் கங்கையைக் கடக்கின்றான். குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று நட்புரிமை கொண்டாடுகின்றான். இராமன் செல்லும் இடத்தில் தனது உயிர்மேவ, குகன் தங்கினான்.

அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்கிறாள். அந்தப் பழைய நிகழ்வுகளில் சீதையின் மனத்தில் பசுமையாக நின்றது, இராமன் குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று அழைத்துப் பாராட்டியது ஆகும். சீதை, இராமன் குகனைக் தோழமையாகக் கொண்ட நிகழ்ச்சியை,