பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


கவர்ந்து கொள்ள வேண்டும் என்றோ சுக்கிரீவன் எண்ணவில்லை. எதிர்பாராமல் வாலி மீண்டும் வந்தபோது, சுக்கிரீவன் ஆட்சி செய்வதைக் கண்டு சினம் கொண்டான்; சுக்கிரீவனை அடித்து விரட்டினான். சுக்கிரீவன் மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டான், எதிர்பாராமல் நடந்த சம்பவங்களைத் தேர்ந்து தெளிதல் வாலியிடத்தில் இல்லாதது ஒரு குறையே. குற்றமற்ற சுக்கிரீவன் துன்பத்திற்கு ஆளானான். பின் இராமனால் மீட்சி ஏற்பட்டது.

கிட்கிந்தையில் சமுதாய அமைப்பு இருந்ததா? குரங்கினம் ஆனாலும் கம்பன் மானுடம் போலவே அமைத்துப் பாடுகிறான்.

கிட்கிந்தா நாட்டில் சொல்லின் செல்வனாகிய அனுமன், சாம்பவான், அங்கதன் முதலிய சிறந்த பாத்திரங்களையும் அந்தப் பாத்திரங்களின் இயல்புகளையும் திறன்களையும் அறிந்து அனுபவிக்க முடிகிறது. ஆதலால், கிட்கிந்தையில் சமுதாய அமைப்பும் உயர்ந்து விளங்கியது என்று நம்பலாம்.

இராமன் கூறிய அரசியல் நெறி

கிட்கிந்தை அரசு எவ்வளவுதான் வலிமையுடையதாக இருந்தாலும் ஆங்கு உள்நாட்டுச் சண்டை நிலவியது; பதவிச் சண்டை நடந்தது. வாலி, சுக்கிரீவனிடமிருந்த அரசையும், சுக்கிரீவன் மனைவி அருமருந்தன்ன உருமையையும் கூடக் கவர்ந்து கொண்டான். பின் இராமனின் உதவியால் அனுமனின் வழிகாட்டுதலுக்கிசைய, வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராமன் முடி சூட்டுகிறான். முடி சூட்டியதோடன்றி ஒரு நல்ல அரசியல் அறிவுரையையும் வழங்குகின்றான்.