பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்37

முடிந்தது. அதனாலேயே நான் நாடு இழந்தேன்; காடு வந்தேன்; மனைவியை இழந்தேன்!” என்று இராமன் கூறுவதால், கூனிக்கு இழைத்த தீமை அவன் நெஞ்சத்தை உறுத்திக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. ஆனால், அந்த உறுத்தல் ஏன் செயலாக்கம் பெறவில்லை. காரணம் அவள் சிறியள் என்ற எண்ணம்தானே! இன்று நமது நாட்டு அரசியலில்—ஆட்சியில்— அல்லற்படுவோர் சிறியோர்தாம் என்பதை எவரேனும் மறுக்க இயலுமா? ஏன் நமது அன்றாட வாழ்விலும் கூடப் பெரியோர் பெரும்பிழை செய்தாலும் பார்த்தும் பாராமல் இருக்கிறோம். சிறியோர் ஒரு சின்னத் தவற்றைச் செய்தாலும் சினந்து வீழ்கின்றோம். இது தவறு என்று சுக்கிரீவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இராமன் வாயிலாகக் கம்பன் அறிவுறுத்துகின்றான்.

காமம் கொடிது. நாடாள்வோர் பெண்வழிச் சேறல் ஆகாது என்றார் திருவள்ளுவர். இங்கு இராமனும் ‘மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்’ (அரசியற் படலம்—12) என்று கூறுகிறான். இதற்கு வாலியும் தயரதனும் சான்றாவர் என்பது உணர்க. நமது தலைமுறையில்கூட இத்தகு நிகழ்வுகள் உண்டு. பரபரப்பான உலகம் ஆதலால் நினைவில் தங்கவில்லை. மக்கள் மறந்து போயினர். ‘தாய் ஒக்கும் அன்பில்’ என்று முன்கூறிய கம்பன் இங்கு இராமன் வாயிலாகத் தம்மைத் தாங்கி நிற்பாரைத் தாங்குதல் வேண்டும். அதாவது யாதொரு துன்பமும் வராது பாதுகாத்தல் வேண்டும், என்று அறிவுரை கூறுகின்றான். நாடாள்வோருக்கு அறமே உயிர்; உறுதி; ஆக்கம்; பயன். அறம் கெடுமாயின் நாடாள்வோர் வாழ்நாள் கெடும். அவர்களுக்கு அறமே கூற்று. கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றை நினைவிற் கொள்க.