பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


இலங்கைப் பேரரசு வன்மை சார்ந்த பேரரசு, வன்மையில் முடிந்த பேரரசு, அயோத்திப் பேரரசு அறம் சார்ந்த பேரரசு, அது வெற்றி பெற்றது அறநெறியாலேயே!

கம்பனின் இராமகாதை பல்வேறு அரசுகளை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவற்றில் இலங்கைப் பேரரசு திருந்தாமல், வல்லாண்மை மீதிருந்த நம்பிக்கையால் அழிந்தது. கிட்கிந்தை அரசு திருந்தி வரலாற்றிலும் காவியத்திலும் இடம் பிடித்துக் கொண்டது. கங்கைக் கரையரசும், மிதிலை அரசும் விவாதங்களைக் கடந்த அரசுகளாக விளங்கின. அயோத்திப் பேரரசு, குறைகளும் நிறைகளும் உடைய பேரரசாக விளங்கி, எந்தச் சூழ்நிலையிலும் அறம் சார்ந்த நெறிமுறைகளையே பின்பற்றியதால் வெற்றி பெற்றது. நம்முடைய காலத்திலும் கம்பன் அடிச்சுவட்டில் அறஞ்சார்ந்த அரசு காண்போமாக.