பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


செயலும் ஒன்றுபடுவது நேர்மை. நேர்மை, உலகியலை நடத்தும் ஒழுகலாறு. மென்ஷியஸ் என்ற சிந்தனையாளன் ‘எனது உயிர் எனக்கு மிக அருமையானது. நேர்மையைக் கடைப்பிடிப்பதும் அதைப் போலவே எனக்கு அருமையானது. இரண்டில் ஒன்று எனக்குக் கிடைக்கும் என்றால் எனது உயிரைவிட்டு விடுவேன்; நேர்மையைத்தான் கடைப் பிடிப்பேன்!’ என்றான். கோசல நாட்டு மக்கள் நேர்மை நெறி பிறழாதவர்கள் என்பது கம்பனின் வாக்கு.

அறம்–தருமம்

வாழ்வியலின் அடிப்படைப் பண்புகளை அறம் என்று கூறுவர். தர்மம் என்ற வட சொல்லுக்கு நேராக அறம் என்று தமிழில் கூறுவதுண்டு. பொருத்தப்பாடு பற்றி ஆய்வு தேவை.

நெறிப்படி செய்யப்படுதல், ஒழுகலாறு என்று திருக்குறள் கூறுகிறது. தருமம் என்பது நூற்றுக்கு நூறு ஒழுகலாறாக வலியுறுத்தப் பெறுகிறது. எவரையும் மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் மறந்தும் துன்புறுத்தாமை, வாய்மை (சத்தியம்) பேணுதல், களவு, காமம், வஞ்சம், உலோபத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபடுதல், எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாழ்க்கை வாழ்தல், நூல்களைப் படித்தல், பிறருக்கு உதவுதல், ஆணவத்தை அறவே விலக்குதல், பகிர்ந்துண்ணல் எல்லா உயிர்களையும் தம் உயிர் போலவே பாவித்தல், எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் உள்ளமையை உணர்தல் இவையெல்லாம் தருமம்.

ஔவையார் ‘அறம் செய விரும்பு’ என்று கூறும்பொழுது கொடுத்தலையே குறிப்பிடுகிறார். பொதுவாக அறநெறி சார்ந்த வாழ்க்கை போற்றப்படுகிறது. சீனத் தத்துவஞானி கன்பூஷியஸ், ‘அறமே அரச மரியாதையை விடச் சிறந்தது, என்றார். ‘அறத்தின் வழிநிலையில் அஞ்ச வேண்டா’ என்பது