பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்51

வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுச் சமூக அமைப்புச் சீர்குலைகிறது. கோசல நாட்டில் நல்லொழுக்கம் உடைய குடிகள் சிறந்து விளங்கியதால் வழிவழி ஒழுக்கமும் வளர்ந்தது.

பெருந் தடங்கண் பிறைநுத லார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?

(கம்பன்-67)

என்ற பாடல் மீண்டும் மீண்டும் நினையத்தக்கது.

கல்வி நலம்

ஒரு நாட்டின் சிறப்புக்கு அந்நாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்வி பெறாத மக்கள் ஒன்றுக்கும் பயன்படார். அர்த்தசாத்திரம் ‘கல்வி, மக்களுக்கு அணிகலன்’ என்று கூறுகிறது. ‘கேடில் விழுச் செல்வம் கல்வி’ என்றது வள்ளுவம். ‘கல்வி கற்காதவன் ஏன் பிறந்தான்?’ — இது பிளேட்டோவின் வினா! ‘கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. மக்களுக்குச் சக்தியைத் தருவது கல்வி. இந்தக் கல்வி மக்களுக்குக் கிடைக்காது போனால் வாழ்க்கையில் தேக்கம் ஏற்படும். கல்வி மக்களுடைய ஆன்மாவிற்கு உணவு.

‘கல்வியும், ஞானமும்’ என்று கம்பன் குறிப்பிடுவான். கல்வி அறிவாக உருப்பெறுதல் வேண்டும். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பம்பையை வருணிக்கிறான். நடுப்பகுதி நீர் தூய்மையாக வெண்மையாக இருந்தது. இதற்கு அறிவுடையோர் உதாரணம். அறிவுடையோர் ஒரு நிலையினராக இருப்பர்; விளங்குவர். கரையோரத்து நீர் நிறம் மாறிமாறிக் காணப்படுகிறது. இது தமக்கென அறிவு இல்லாதவர்களாக