பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


‘களிக்கின்றார்கள் அல்லது கவல்கின்றார் இல்லை’ என்று கூறிய கம்பன் பிறிதோரிடத்திலும் ‘இலங்கையில் அழுகையோ புலம்பலோ இருந்ததில்லை, கேட்டதில்லை’ என்று பாடுகின்றான். இலங்கை மக்கள் இசை ஒலிகளைக் கேட்டுப் பழகியிருந்தனர். ஒருபோதும் புலம்பலைக் கேட்டதில்லை என்று சூர்ப்பணகை புலம்பலின் போது குறிப்பிடுகின்றான் கம்பன்.

முழவினில், வீணையில், முரல் நல் யாழினில்,
தழுவிய குழலினில், சங்கில், தாரையில்,
எழுகுரல் இன்றியே, என்றும் இல்லதுஓர்
அழுகுரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்று அரோ.

(கம்பன்-3102)

இது இலங்கையின் சிறப்பு

இலங்கையில் மக்கள் தங்களுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை பெற்றிருந்தனரா? அல்லது வன்மை சார்ந்த ஆட்சியின் காரணமாக வாய் மூடி மெளனிகளாகப் போய்விட்டார்களா? இலங்கையில் மக்களின் இயக்கத்தையே காணோம்! இலங்கை அரசன் இராவணன் அனுமனால் அழிக்கப்பெற்ற நகரத்திலும் சிறந்த புதிய நகரம் ஒன்று அமைத்தான். அப்போது மக்கள் மகிழ்ந்ததாகக் கம்பன் பாடவில்லை. இராவணன் செத்த பொழுதும் இலங்கை மக்கள் அழுததாகத் தெரியவில்லை. வன்முறை அரசின் காரணமாக இலங்கை மக்கள் சிரிப்பதற்கும் அழுவதற்கும் தெரியாமல் மறந்துவிட்டனர். ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமாயின் அந்நாட்டு மக்கள் புவியை நடத்தக் கூடிய வகையில் சிரிக்கவும் அழவும் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, அரசின் நடைமுறையில் பங்கேற்க வேண்டும்.