பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


“கலம் சுரக்கும் நிதியம்; கணக்கு இலா
நிலம் சுரக்கும், நிறைவளம்; நல்மணி
பிலம் சுரக்கும்”

(கம்பன்-69)

என்று குறிப்பிடுகின்றான்.

கோசல நாட்டில் வறுமை இல்லை. வறுமை கொடியது. சமய நூலாகிய சித்தியார், ‘வறுமையாம் சிறுமை தப்பி’ என்று கூறும் ‘நெருப்பினுள் தூங்கலாம் ஆனால் வறுமையில் தூங்க முடியாது’ என்று திருக்குறள் கூறும். வறுமை மனிதனுடைய உணர்ச்சியை மரத்துப் போகச் செய்து விடுகிறது. உயரிய பண்புகளை இழக்குமாறு செய்துவிடுகிறது. வறுமை மனிதனுடைய ஊக்கத்தையும் பண்பையும் பறித்துவிடுகிறது. ஆதலால்,

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”

(திருக்குறள்-153)

என்றது திருக்குறள். மக்களிடத்தில் வறுமை இருக்குமானால், அந்நாட்டில் நல்ல சமுதாய அமைப்பும் இராது, நல்லாட்சியும் இராது என்று கூறுவர். கோசல நாட்டில் வள்ளன்மை இல்லை. ஏன்? வறுமையில்லாமையால்! கோசல நாட்டில் ‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை’ என்பது கம்பனின் பாடல். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெற்றிருந்தார்கள் என்பது நடைமுறைச் சாத்தியமா? அல்லது கம்பனின் இலட்சியமா? ‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தி வாழ்தல் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இயலும்’ என்பது மாமுனிவர் மார்க்சின் கருத்து. இதுவரையில் பொதுவாக உலக அரங்கில் எந்த நாட்டிலும் பொதுவுடைமைச் சமுதாயம் அமையவில்லை.