பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


அனுமன் தூதுவனாக அமர்ந்து பேசுகின்றான். உலக வரலாற்றில் தீமை ஒரு பொழுதும் நன்மையையோ, வெற்றியையோ பெற்றதில்லை. வெற்றி பெற இயலாது. பொருளையும், காமத்தையும் அனுமன் ‘இருள்’ என்று குறிப்பிடு கின்றான். வாழ்க்கையின் தெரிவு ஈதலும் அருளுமேயாம். அனுமன் கடைசியாக இராவணனை எச்சரிக்கை செய்கிறான்:

“ஆதலால் தான் அரும்பெறல் செல்வமும்
ஒது பல்கிளையும் உயிரும் பெற,
‘சீதையைத் தருக’ என்று எனச் செப்பினான்
சோதியான் மகன் நிற்கு” எனச் சொல்லினான்.

(கம்பன்-5910)

என்பது கம்பன் பாடல்.

மனித இயல்பு

மனிதன், மனிதனுமல்லன்; விலங்குமல்லவன், தெய்வமுமல்லன். மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, கடவுள் தன்மையை அடைய வேண்டிய படைப்பு. இந்த உண்மையை உணர்ந்து, அறிந்து, தெளிந்து வாழ்பவர்கள் பலர் இல்லை. மிகமிகச் சிலர்தான் உள்ளனர். இந்த நிலையிலும் எப்போதும் மனிதனிடத்தில் மிருகக் குணம், மனித இயல்பு, தெய்வப் பண்பு ஆகியன உடன் சேர்ந்து கலவையாக இருக்கும். சூழ்நிலைமையின் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவற்றில் ஒன்று கூடும்; பிறிதொன்று குறையும். மனித இயல்புகளை நுண்ணிதில் கண்டுணர்த்திய சான்றோர் மனிதனை தேவாங்கு, பாம்பு, பன்றி, நாய், வேட்டைநாய், கிளிப்பிள்ளை, கழுதை, வான்கோழி, தூண், கழுகு, ஆந்தை என்று கூறினர். ஆந்தைக்கு வெளிச்சம் பிடிக்காது. மனிதனுக்கு உண்மை பிடிக்காது. உழைக்காமல் பிறர் பிழைப்பில் வாழ்பவன் கழுகு. கல்வியறிவு