பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்77


சீதையைத் தேடிப் போனவன்தான். ஆயினும் அனுமனுக்கும் அரக்கர்களுக்கும் போர் நடக்கின்றது. அனுமன், தன்னந்தனியனாக, அரக்க வீரர்களைப் போர்க் களத்தில் சந்தித்துக் கொன்று குவிக்கிறான். இது தூதனுக்குள்ள கடமையன்று. இலங்கையர்களும் அனுமனைத் தூதன் என்று எண்ணவில்லை. அனுமனைத் தூதன் என்று எண்ணியவன் விபீடணன் மட்டுமே!

அனுமனுக்கு இலட்சியம் இரண்டு, ஒன்று சீதையை மீட்பது, மற்றொன்று இராவணனும் மற்ற அரக்கர்களும் கொடுந் தொழிலிலிருந்து விடுபட வேண்டும் என்பது. இவ்விரண்டும் நடைபெறும் வகையில் அனுமன் முயற்சி செய்தான். இராவணன் மனத்தில் ‘ஆற்றலும் நீதியும் மனங்கொள நிறுவ' என்பது அனுமனின் ஆசை, ஆனால், இராவணன் கேட்க வேண்டுமே! அனுமன் இராவணனிடம் தன்னைத் தூதன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கின்றான். அனுமன் தனது தலைவன் பரம்பொருள்—மண்ணில் பிறந்து நடமாடும் பரம்பொருள் என்று குறிப்பிடுகின்றான். அறநெறி சார்ந்த முயற்சி பலனளிக்கவில்லை. அனுமன் தன் வாலில் வைக்கப்பட்ட தீயைக் கொண்டு இலங்கை எழில்களை அழித்துவிட்டு இராமனிடம் மீண்டான். இராமனிடம் மீண்ட அனுமன் இராமன் முன்னிலையில் சீதையிருந்த திசை நோக்கித் தொழுதான்.

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன், முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழிஇ நெடிதுஇறைஞ்சி வாழ்த்தினான்.

(கம்பன்-6028)

என்று பேசுவான் கம்பன். மேலும் சீதையின் கற்பு நிலையை உறுதிப் படுத்த அனுமன், ‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்றும்,