பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கலைஞருமாகிய திரு. வானதி திருநாவுக்கரசு அவர்களும் பொறுத்தாற்றிக் கொள்ள வேண்டும்.

சொற்பொழிவு 28.07.1994 மாலை, கம்பன் கண்ட ஆட்சியில்–அரசியல், சமூகம், பொருளாதாரம் என்பது தலைப்பு. நமது நாடு மக்களாட்சி முறையில் குடியரசு நாடாக விளங்குகிறது. குடியரசு நாட்டில் வாழ்கிற மக்களுக்கு அரசியல்–ஆட்சியியல் பற்றிய அறிவு தேவை: விழிப்புணர்வு தேவை. இன்று நமது நாட்டு அரசியலை மக்கள் அரசியலைக் கட்சிகளிடம் ஒப்படைத்துவிட்டோம். இது தவறு. கட்சியினர் ஆளட்டும்! ஆனால், எப்படி ஆள வேண்டும் என்று சொல்கிற உரிமை நமக்கு– நமது நாட்டு மக்களுக்கு இருத்தல் வேண்டும். நாடு முழுதும் பரவலாக அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். ஒரு நாட்டு மக்கள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்களோ, எதைப்பற்றிப் பேசுகிறார்களோ அந்தத் திசையில் நாடு நகரும். இது வரலாற்று உண்மை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு’ என்று பாரதி பாடினான். நாடு சுதந்திரம் பெற்றது.

இவ்வாறு நமது நாடு சிறந்த ஜனநாயக நாடாக விளங்க வேண்டும். கம்பன் காட்டும் கோசல நாட்டு அரசு, முடியரசு, ஆயினும் குடியாட்சிப் பண்பு இருந்தது. கோசல நாட்டு மன்னன் உடல்; மக்கள் உயிர். இது ஒரு வளர்ந்த அரசுக்கு அடையாளம்! இன்று நமது நாட்டில் முற்றாக ஜனநாயக ஆட்சியில் எதிர்மறை நிலை! ஏன்? நாம், நம்முடைய அரசியல் கடமையைச் செய்வதில்லை.